ஓமலூரில் அஜித் பேனர்கள் அகற்றம் போலீசாரிடம் ரசிகர்கள் வாக்குவாதம்

ஓமலூர், ஜன.10: சேலம் மாவட்டம் ஓமலூரில் நடிகர் அஜித்குமார் நடித்த விஸ்வாசம் படம் இன்று வெளியாவதையொட்டி ரசிகர்கள் சார்பில் வரவேற்பு தெரிவித்தும், படம் வெற்றி பெற வாழ்த்து தெரிவித்தும் ஆங்காங்கே பேனர்கள் வைக்கபட்டிருந்தது. ஓமலூர் பேரூராட்சி பகுதிகளில் பேனர்கள் வைக்க ரசிகர்கள் அனுமதி கேட்டனர். ஆனால் பேரூராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கவில்லை. இந்தநிலையில் ஓமலூர் பேரூராட்சி வணிக வளாகத்தின் மேல் பேனர் வைக்கப்பட்டது. தகவல் அறிந்து போலீசாருடன் வந்த ஓமலூர் பேரூராட்சி அதிகாரிகள் அந்த பேனரை அகற்ற முற்பட்டனர்.

அப்போது அங்கே வந்த அஜித் ரசிகர்கள் எதிர்ப்பு தெரிவித்து தகராறில் ஈடுபட்டனர். பேனரை அகற்றினால்  போராட்டம் நடத்துவோம் என எச்சரிக்கை விடுத்தனர். அப்போது, பேருந்து நிலையம் மற்றும் பேரூராட்சி வணிக வளாக பகுதிகளில் அனுமதியின்றி பேனர் வைக்கக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதனாேலேயே பேனர் அகற்றப்படுகிறது. ஒருநாள் மட்டும் பேனர் இருக்க அனுமதிக்க வேண்டும் என்று அஜித் ரசிகர்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டு போலீசார் உதவியுடன் பேனர் அகற்றப்பட்டதுடன், ரசிகர்களும் அங்கிருந்து அப்புறப்படுத்தப்பட்டனர்.

× RELATED நாமக்கல் மணிக்கூண்டு பகுதியில் நாள்தோறும் வைக்கப்படும் அஞ்சலி பேனர்கள்