ஓசூரில் துணிகரம் காண்ட்ராக்டர் வீட்டு பூட்டை உடைத்து 32 பவுன் நகை, ₹40 ஆயிரம் கொள்ளை மர்ம நபர்களுக்கு வலை

ஓசூர், ஜன.10: ஓசூரில் காண்ட்ராக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 32 பவுன் நகை மற்றும் ₹40 ஆயிரத்தை கொள்ளையடித்து தப்பிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் சாந்தி நகரில் வசித்து வருபவர் திருஞானவாசகர்(44). இவர் கிழக்கு ஓசூரில் எலக்ட்ரிக்கல் காண்ட்ராக்டராக தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி எப்சிபா(34), தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இந்த தம்பதிக்கு 16 வயதில் மகனும், 11 வயதில் மகளும் உள்ளனர். நேற்று காலை, மகன் மற்றும் மகளை பள்ளிக்கு அனுப்பி விட்டு, கணவன்-மனைவி இருவரும் பணிக்கு புறப்பட்டு சென்றனர். பின்னர், பகல் 1 மணிக்கு பணி முடிந்து திருஞான வாசகர், வீட்டுக்கு வந்த போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.

 உள்ளே சென்று பார்த்த போது, இரண்டு பீரோக்கள் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 32 பவுன் நகை மற்றும் ₹40 ஆயிரம் ரொக்கத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. உடனடியாக இது குறித்து ஓசூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் லட்சுமணதாஸ் மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தடயங்கள் சேகரிக்கப்பட்டன. பட்டப்பகலில் நடந்த இந்த கொள்ளை சம்பவம், அப்பகுதி மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.

× RELATED தொட்டியம் அருகே பாலபுரத்தில் வடிகால் பாலத்தில் மெகா ஓட்டை