கோவை மாவட்டத்தில் குழந்தைகள் காப்பகத்தில் விதிமீறல் புகார்

கோவை, ஜன. 10: கோவை மாவட்டத்தில் குழந்தைகள் காப்பகத்தில் விதிமீறல் நடப்பதாக புகார் எழுந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 2017ம் ஆண்டு கணக்கெடுப்பின்படி 1,932 குழந்தைகள் காப்பகம் செயல்படுவதாக கண்டறியப்பட்டது. இதில், 800க்கும் மேற்பட்ட குழந்தைகள் காப்பகம் அனுமதியின்றி, சட்ட விரோதமாக இயங்கி வருவது கண்டறியப்பட்டு, ‘சீல்’ வைக்கப்பட்டது. 2018ம் ஆண்டு உரிய அனுமதியின்றி செயல்பட்டதாக மேலும் 438 குழந்தைகள் காப்பகம் மூடப்பட்டது. தற்போது 494 குழந்தைகள் காப்பகம் மட்டுமே இயங்குகிறது. மேலும், 691 குழந்தைகள் காப்பகம் பதிவுக்காக விண்ணப்பித்து காத்திருக்கின்றன. தனியார் அமைப்புகள் தவிர, தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டில் 26 குழந்தைகள் காப்பகங்கள் இயங்கி வருகிறது.  
கோவை மாவட்டத்தில் 21 குழந்தைகள் காப்பகம் இயங்கி வருகிறது. இவற்றில், அரசின் அனுமதி பெற்று 5 காப்பகங்கள் மட்டுமே முறையாக இயங்கி வருகிறது. கோவையில் உள்ள தனியார் குழந்தைகள் காப்பக நிர்வாகிகள், சட்ட விரோதமாக குழந்தைகளை தத்து கொடுப்பதாகவும், இதன்மூலம், தத்து பெறுபவர்களிடமிருந்து பெரும் தொகை கைமாறுவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதுதவிர, தொழிலதிபர்கள், அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், லயன்ஸ், ரோட்டரி உள்ளிட்ட தன்னார்வ அமைப்புகளிடமிருந்து நன்கொடை பெற்று, பல லட்சம் ரூபாய் சுருட்டுவதாகவும் புகார் மனு குவிந்துள்ளது.
 இம்முறைகேடுகளை தடுக்க, குழந்தைகள் காப்பகங்கள் முறையாக பதிவு செய்யப்பட வேண்டும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. மாநில அரசுகள், இந்த உத்தரவை பின்பற்ற வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. ஆனால், மாநில அரசின் கண்காணிப்பு குறைபாடு காரணமாக இந்த விதிமீறல் தொடர்கிறது. இக்காப்பகங்களில் உள்ள குழந்தைகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பதாகவும் புகார் எழுந்துள்ளது. சிறுவர் நீதி (சிறுவர் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டம் 2015-ன் படி, அனைத்து குழந்தைகள் காப்பகங்களும் மத்திய தத்தெடுப்பு ஆதார ஆணையத்தில் பதிவு செய்து, இணைப்பில் இருக்க வேண்டும் என்பது கட்டாயம். ஆனால், பல காப்பகங்கள் இதனை மதிக்காமல் தன்னிச்சையாக செயல்படுகிறது.
கோவை  அருகே சுகுணாபுரம் பாலமுருகன் கோயிலில் வீதியில், உரிய அனுமதியின்றி ஒரு  குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருவதாக மாவட்ட குழந்தைகள் காப்பக  அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.  இதையடுத்து, மாவட்ட குழந்தைகள் நல  அலுவலர் சுந்தர் தலைமையில் அதிகாரிகள் நேற்று முன்தினம் சம்பவ இடத்திற்கு  நேரில் சென்று ஆய்வு நடத்தினர். இந்த காப்பகம் அரசு அனுமதி இல்லாமல் இயங்கி  வருவது தெரியவந்தது. இதையடுத்து, ‘சீல்’ வைத்தனர்.

 இங்கு தங்கியிருந்த  23 குழந்தைகள் மீட்கப்பட்டு, அரசின் அனுமதிபெற்ற உக்கடம் டான்பாஸ்கோ அன்பு  இல்லத்திற்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். இதுகுறித்து குனியமுத்தூர்  போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் ஷேக்தாவூத், சிராஜூதீன், தஸ்தகீர்  உள்பட 4 பேர் மீது வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதுபற்றி கோவை மாவட்ட சமூக நலத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘’கோவை மாவட்டம் முழுவதும் உள்ள குழந்தைகள் காப்பகத்தில் ஆய்வு நடத்தப்பட்டு, இடவசதி, காற்றோட்டம், குடிநீர், கழிப்பிடம், கல்வி உள்ளிட்ட விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகிறது. விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டால் மட்டுமே அனுமதி வழங்கப்படும். இதர காப்பகங்கள் அதிரடியாக மூடப்படும்’’ என்றனர்.

× RELATED சென்னை மாவட்டத்தில் அங்கீகாரம்...