இளையான்குடியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவிக்க வலியுறுத்தல்

இளையான்குடி, ஜன.10: இளையான்குடியை வறட்சி பாதித்த பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவிக்க வேண்டும் என, அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளனர்.இளையான்குடி தாலுகாவிற்கு உட்பட்ட அ.திருவுடையார்புரம், இளையான்குடி, தாயமங்கலம், சாலைக்கிராமம், சூராணம் ஆகிய வருவாய் பிர்காக்களுக்கு உட்பட்ட பகுதிகள் விவசாயம் நிறைந்தவை ஆகும். விவசாயத்திற்கு அடுத்தபடியாக கால்நடை வளர்ப்பு முக்கியமானதாக உள்ளது. பருவமழையை நம்பியே இளையான்குடி வட்டார பகுதி விவசாயிகள் உள்ளனர். கடந்த மூன்றாண்டு காலமாக பருவமழை முற்றிலும் ஏமாற்றிவிட்டது. இதனால் விவசாயம் கேள்விக்குறியாகி வருகிறது. பருவமழை கைவிட்டதால் கடந்த ஆண்டு சுமார் 16 ஆயிரம் எக்டேரில் நெல் விவசாயம் முற்றிலும் பாதிப்படைந்தது. ஏக்கருக்கு உழுதது முதல் விதைப்பு, மருந்து தெளித்தது என ரூ.30 ஆயிரம் வரை விவசாயிகள் இரட்டிப்பு செலவு செய்தனர்.
அதுபோல இந்த ஆண்டும் இளையான்குடி பகுதியில் போதிய மழை இல்லாததால், நெல் பயிர்கள் அனைத்தும் கருகியது. நடப்பாண்டில் சுமார் 17 ஆயிரம் எக்டேரில் நெல் விவசாயம் செய்யப்பட்டதில், 13 ஆயிரம் எக்டேர் தண்ணீர் இல்லாமல் பாதிப்படைந்தது. வளர்ந்த நெல் பயிர்கள் அனைத்தும் கருகி வருவதால், டிராக்டர் மூலம் அழித்து வருகின்றனர். எனவே இளையான்குடியை வறட்சி பாதித்த பகுதியாக மாவட்ட நிர்வாகம் அறிவித்து, விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என, விவசாயிகளும், அனைத்து கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சுப.மதியரசன்(திமுக) கூறுகையில், ‘‘கடந்த மூன்று ஆண்டுகளாக மழை முற்றிலும் ஏமாற்றியதால் இந்த பகுதியில் விவசாயிகள் கடுமையாக பாதிப்படைந்துள்ளனர். காசு கொடுத்து தண்ணீரை வாங்கி, டேங்கர் மூலம் நெல் பயிர்களுக்கு பாய்ச்சியும் பயனில்லாமல் போனது. அதனால் இளையான்குடி வட்டார விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இளையான்குடியை வறட்சி பாதித்த பகுதியாக அறிவித்து உரிய இழப்பீடு வழங்க கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.

மலைச்சாமி(காங்கிரஸ்) கூறுகையில், ‘‘இளையான்குடி பகுதியில் மழை இல்லாததால், வளர்ந்த நெல் பயிர்கள் கருகியுள்ளன. இதனால் இழப்பீடு வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
× RELATED ஹைட்ரோ கார்பன் திட்டத்தை கைவிட மா.கம்யூ. வலியுறுத்தல்