விவசாயிகள் சாலை மறியல்

காளையார்கோவில், ஜன.10: நூறு சதவீத பயிர் காப்பீடு வழங்கக் கோரி காளையார்கோவில் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.அனைத்து விவசாயகடனையும் தள்ளுபடி செய்ய வேண்டும். சிவகங்கை மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும். 100 சதவீதம் பயிர் காப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும், காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை, கண்ணங்குடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு மிக குறைந்தளவு பயிர் காப்பீடு அறிவித்ததை கண்டித்தும் காளையார்கோவிலில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
பேருந்து நிலையம் அருகில் மதுரை-தொண்டி நெடுஞ்சாலையில் நடந்த மறியலுக்கு காளையார்கோவில் விவசாய சங்க ஒன்றிய செயலாளர் ஜோதிநாதன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் ஜெயராமன், செயலாளர் ஆறுமுகம், மாவட்டக் குழு மாணிக்கம், விவசாய தொழிலாளர் சங்க மாவட்டக்குழு திருநாவுக்கரசு, மெய்யப்பன் உள்பட ஏராளமான விவசாயிகள் கலந்துகொண்டனர்.
காளையார்கோவில் இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையில் போலீசார் சாலைமறியலில் ஈடுபட்டவர்களை கைது செய்து அருகில் உள்ள தனியார் மண்டபத்தில் அடைத்தனர். சுமார் அரை மணிநேரம் நடந்த மறியலால் போக்குவரத்து தடைபட்டது.

× RELATED விவசாயிகள் குறைதீர் கூட்டம்