உடல்நல கேடுகளுக்கு உணவே பெரிதும் காரணம்

உயர்ரத்த அழுத்தம் உள்ளிட்ட பல்வேறு நோய்களையும் மருந்தின்றி குறைக்க முடியும். இதற்காக நடைமுறை வாழ்க்கையில் பல்வேறு மாறுதல்களையும், உணவுமுறைகளையும் வகுத்து கொள்ள வேண்டும். இந்த மாற்றமே பல்வேறு நோய்களுக்கும் சிறந்த நிவாரணியாக இருக்கும். உண்ணும் உணவே மருந்து. எனவே இதை நெறிப்படுத்தினால் நமது உடலுக்குள் பல்வேறு அற்புதங்களும், மாற்றங்களும் ஏற்படும்.
முதலில் உணவை திட்டமிட்டு கட்டுக்குள் கொண்டு வர வேண்டும். சாப்பாட்டு நேரம், அளவு, உணவு வகை போன்றவற்றை தங்களது உடல், வயது, நோய்க்கு ஏற்ப வகுத்து கொள்ள வேண்டும். இறைச்சியை தவிர்க்க முடியாவிட்டாலும் குறைத்து கொள்வது நல்லது. உப்பை குறைத்து எடையையும் குறைப்பது அவசியம். புகை, மதுவை நிறுத்தினால் ரத்த அழுத்தம், புற்றுநோய் போனறவற்றை வெகுவாய் தவிர்க்கலாம். உடலுழைப்பு இல்லாதவர்கள் ஏதாவது ஒரு உடற்பயிற்சியை மேற்கொள்ளலாம்.
மனஇறுக்கம் தவிர்த்து ஏதாவது ஒரு பொழுதுபோக்கு, குடும்பம், நண்பர்களுடன் நேரத்தை மகிழ்ச்சியாக செலவிடலாம்.
இயற்கை மருத்துவமுறையிலோ உணவின் பங்களிப்பு மிகப்பெரியது. உணவினை கொண்டே உடல் வளர்வதால் உடலினுள் நிகழ்கின்ற கேடுகளுக்கு உணவே பெரிதும் காரணமாகிறது.
உணவு என்றால் உப்பு, சர்க்கரை, டீ, இறைச்சி போன்றவை எந்தளவிற்கு உடலுக்குள் செல்கிறதோ அதற்கேற்ப உடல் வளர்ச்சி, நன்மை, தீமை ஏற்படுகிறது. போதாக்குறைக்கு உடலிற்குள் செல்லும் புகை, மது, புகையிலையும் அதன் வீரியத்திற்கேற்ப உடலை பதம்பார்க்கிறது.
எனவே பெரும்பாலான நேரங்களில் உடல் கேட்டிற்கு நாமேதான் காரணமாகி வருகிறோம். வெளிக்காரணிகளை விட உள்காரணங்களே உடல்நிலையை தீர்மானித்து விடுகிறது.
தெரிஞ்சுக்கலாம் வாங்க...
அதிக எடை கொண்ட ஒருவரது இதயம் சரியான எடை உடைய ஒருவரது இதயத்தை விட இரண்டு, மூன்று மடங்கு கூடுதல் எடை இருக்கும். கொழுப்பினால் சூழப்பட்டுள்ள இந்த இதயத்திற்கு குறைவான ரத்தமே கிடைக்கும். அதிலும் உயர்ரத்த அழுத்தம் இருக்கின்ற போது அபாயம் இன்னும் அதிகரிக்கும். எனவே இதயத்தை வலுவிழக்க செய்யும் அதிகஉடல் எடையை கட்டுப்படுத்துவது பல்வேறு நோய்களில் இருந்தும் தற்காத்து கொள்ள வழிவகுக்கும்.
தசைசிதைவு நோய்க்கு இலவச சிகிச்சை
தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தசைப்பயிற்சி அளிக்க பகல்நேர மையங்கள் இயங்கி வருகிறது. இது சென்னை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, வேலூர், கோவை ஆகிய மாவட்டங்களில் உள்ளது. தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டவர் என்று சான்றுடன் விண்ணப்பிக்க வேண்டும்.
தொடர்பு முகவரி: மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகம், கலெக்டர் அலுவலகம், திண்டுக்கல் அல்லது முதன்மைச் செயலர் மற்றும் ஆணையர், மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆணையரகம், எஸ்ஆர்டிசி.வளாகம், ஜவஹர்லால்நேரு உள்வட்ட சாலை, கேகே.நகர், சென்னை-78 என்ற முகவரிக்கோ (0451) 2460099 என்ற எண்ணிற்கோ தொடர்பு கொள்ளலாம்.

× RELATED தண்ணீர் பிரச்சினைக்கு அரசின் மெத்தனமே காரணம்: சகாயம் ஐ.ஏ.எஸ்