திருவெற்றியூர் கோயிலில் அடிப்படை வசதிகள் சுத்தமாக இல்லை

திருவாடானை, ஜன. 10:  திருவெற்றியூரில் ஆபத்தான நிலையில் உள்ள பக்தர்கள் தங்கும் விடுதியை அகற்றி விட்டு, புதிய விடுதியை கட்டித்தர வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் சமேத வன்மீக நாதர் சுவாமி திருக்கோயில் உள்ளது. பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தினமும் நூற்றுக்கணக்கான வெளியூர் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். வெள்ளி, செவ்வாய் கிழமைகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சாமி கும்பிட்டு செல்கின்றனர். இக்கோயிலில் இரவு தங்கி சாமி கும்பிடுவதை பக்தர்கள் சிறப்பாக கருதுகின்றனர். இதனால் இங்கு வரும் பக்தர்கள் பெரும்பான்மையோர் இரவு தங்கி சாமி கும்பிடுவதை வழக்கமாக வைத்துள்ளனர்.
இவ்வாறு தங்கி சாமி கும்பிடும் பக்தர்களுக்காக இரண்டு பெரிய திறந்தவெளி மண்டபங்கள் கட்டப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பாக தங்க சிறிய அளவிலான தனி அறைகள் கட்டப்பட்டுள்ளன. இரண்டு விடுதிகள் கட்டப்பட்டுள்ளது. இதில் இரண்டு விடுதிகளும் போதிய பராமரிப்பின்றி இடியும் நிலையில் உள்ளதால், வாடகைக்கு விடாமல் பூட்டியே கிடக்கிறது. இதுகுறித்து திருவெற்றியூர் பொதுமக்கள் கூறுகையில், ‘‘பிரசித்தி பெற்ற இக்கோயிலுக்கு தினமும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு வரும் பக்தர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்ய வில்லை. குறிப்பாக பக்தர்கள் பாதுகாப்பாக தங்க 8 சிறிய அறைகள் மட்டுமே உள்ளன. இரண்டு விடுதிகள் பல ஆண்டுகளாக இடிந்த நிலையில் பூட்டியே கிடக்கிறது. இவற்றை அகற்றி விட்டு அதே இடத்தில் புதிய தங்கும் விடுதி கட்ட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

× RELATED பஞ்சப்பள்ளி அருகே அடிப்படை வசதிகள் செய்து தர கோரிக்கை