நகராட்சிகளில் நீச்சல்குளம் அமைக்க மனு

மதுரை, ஜன. 10: மதுரை, சர்வேயர் காலனியைச் சேர்ந்த வக்கீல் சுந்தரராஜ், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: நீச்சல் பயிற்சி உடலுக்கும், மனதுக்கும் வலிமை தரக் கூடியது. ரத்த ஓட்டத்திற்கு நல்லது. பல்வேறு தனியார் பள்ளிகளில் நீச்சல் பயிற்சி வகுப்புகள் நடத்தப்படுகின்றன. ஆனால், அரசு பள்ளி மாணவர்களுக்கு நீச்சல் பயிற்சி கிடைப்பதில்லை. தனியார் நீச்சல் குளங்களை அனைவராலும் பயன்படுத்த முடியாது. மதுரை மாநகராட்சியில் ஒரு நீச்சல் குளம் இயங்குகிறது. இதை மாவட்டம் முழுவதிலும் உள்ள பலரும் பயன்படுத்துகின்றனர். ஆனால், மாவட்டத்தில் பல லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட திருமங்கலம், உசிலம்பட்டி மற்றும் மேலூர் நகராட்சியில் நீச்சல் குளங்கள் இல்லை. இதனால், மாணவர்கள், இளைஞர்கள் பாதிக்கப்படுகின்றனர். எனவே, மாணவர்கள் நலன் கருதி திருமங்கலம், உசிலம்பட்டி மற்றும் மேலூர் நகராட்சிகளில் நீச்சல் குளங்களை அமைக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை நேற்று விசாரித்த நீதிபதிகள் கே.கே.சசிதரன், பி.டி.ஆதிகேசவலு ஆகியோர் மனுதாரர் தரப்பில் சம்பந்தப்பட்ட நகராட்சிகளில் மீண்டும் மனு அளிக்க வேண்டும். அந்த மனுவை பரிசீலித்து 3 நகராட்சிகளின் கமிஷனர்களும் 4 வாரத்திற்குள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளனர்.

Related Stories: