மாவட்ட நீதிமன்றத்தில் பாரம்பரிய பொங்கல் விழா

மதுரை, ஜன. 10: மதுரை மாவட்ட நீதிமன்றத்தில், வழக்கறிஞர் சங்கத்தின் சார்பில், நேற்று பாரம்பரிய பொங்கல் விழா நடந்தது. சங்க தலைவர் நெடுஞ்செழியன் தலைமை வகித்தார். செயலாளர் மோகன்குமார் வரவேற்றார். மங்கல இசையுடன் விழா தொடங்கியது. பெண் வக்கீல்கள் சர்க்கரை பொங்கல் வைத்தனர். தமிழர்களின் பாரம்பரிய மானாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், பறையிசை, தேவராட்டம் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. ஐகோர்ட் கிளை நிர்வாக நீதிபதி கே.கே.சசிதரன், ஐகோர்ட் நீதிபதி ஆர்.தாரணி, பேச்சாளர் பர்வீன் சுல்தானா ஆகியோர் விழாவில் பங்கேற்றனர். பட்டிமன்ற பேச்சாளர் ராஜா தலைமையில் பட்டிமன்றம் நடைபெற்றது. பல்வேறு விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. சேவல் சண்டை நடந்தது. ஜல்லிகட்டு காளைகளும், ஆடுகளுக்கும் மரியாதை செய்யப்பட்டது. விழாவில் பங்கேற்ற ஆண்கள் வேட்டி சட்டையுடனும், பெண்களும் சேலையுடனும் பாரம்பரியத்தை போற்றும் வகையில் பங்கேற்றனர். முதன்மை அமர்வு நீதிபதி நசீமாபானு, மாவட்ட நீதிபதி கார்த்திகேயன், தலைமை குற்றவியல் நீதிபதி சத்திய மூர்த்தி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். சங்க பொருளாளர் கணேசன் நன்றி கூறினார்.

Related Stories: