தொழிலாளர் விரோத போக்கை கண்டித்து 2வது நாளாக வேலைநிறுத்தம், மறியல் 640 பேர் கைது

திண்டுக்கல், ஜன. 10: தொழிலாளர் விரோத போக்கை கடைபிடிக்கும் மத்திய அரசை கண்டித்து மாவட்டத்தில் தொழிற்சங்கங்கள் சார்பில் 2வது நாளாக வேலைநிறுத்தம் நடந்தது. சாலைமறியலில் ஈடுபட்ட 640 பேர் கைது செய்யப்பட்டனர்.தொழிலாளர் விரத போக்கு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் 2வது நாளாக நேற்று வேலைநிறுத்தம், சாலைமறியல் போராட்டங்கள் நடந்தது.*திண்டுக்கல்லில் எல்பிஎப் மாநில தலைவர் பஷீர்அகமது தலைமையில் பேரணி, ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் எல்பிஎப் மாவட்ட தலைவர் அழகர்சாமி, சிஐடியு மாவட்ட செயலாளர் கணேசன், சிபிஎம் மாநிலக்குழு பாண்டி, ஏஐடியுசி மாவட்ட செயலாளர் ஜெயமணி உள்பட பலர் கலந்து கொண்டனர். மணிக்கூண்டில் இருந்து கோஷங்கள் எழுப்பியவாறு பேரணியாக வந்தனர். மாநகராட்சி அலுவலகம் அருகே வந்தபோது போலீசார் தடுத்து 500க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். திண்டுக்கல் தலைமை தபால் நிலையம் முன்பு விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன் தலைமையில் சாலைமறியலில் ஈடுபட்ட 40க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

*பழநி பஸ் நிலையம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலைமறியலில் ஈடுபட்டனர். சிஐடியுசி, ஐஎன்டியூசி அமைப்புகளின் சார்பில் நடந்த இப்போராட்டத்தில் சிஐடியு கன்வீனர் பிச்சைமுத்து தலைமை வகித்தார். மாவட்ட பொருளாளர் மனோகரன், மாவட்ட துணைத் தலைவர் மோகனா, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க நகரச் செயலாளர் மாரிக்கண்ணு, இந்திய மாணவர் சங்க மாநில துணைச் செயலாளர் பொன்மதி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் கந்தசாமி, மாவட்டக்குழு உறுப்பினர் குருசாமி, ஐஎன்டியூசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 80க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.*கொடைக்கானல் எழுரோடு சாலையில் மார்க்சிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தமைமை தபால் நிலையம் அருகே சாலைமறியலில் ஈடுபட முயன்றனர். போலீசார் தடுத்து 60 பேரை கைது செய்தனர். இதேபோல் மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் மத்திய அரசை கண்டித்து தொழிற்சங்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், மறியல் நடந்தன.

Related Stories: