பள்ளிகளில் இடம் ஒதுக்கி கொடுத்தால் மூலிகை தோட்டங்களை அமைக்க தயார் கருத்தரங்கில் வனத்துறை அதிகாரி பேச்சு

ஆலங்குடி, ஜன.10: ஆலங்குடி அருகேயுள்ள பனங்குளம் அரசு பள்ளியில் வனத்துறையின் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள், மாணவர்களுக்கு மரம் வளர்ப்பு பயிற்சி மற்றும் கருத்தரங்கம் நடந்தது. விழாவில் மாணவர்கள், விவசாயிகளுக்கு சுமார் 2,500 மரங்கன்றுகளை வனத்துறையினர் வழங்கினர். புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி தாலுகாவிற்குட்பட்ட கீரமங்கலம், வடகாடு, கொத்தமங்கலம், சேந்தன்குடி, நெடுவாசல், புள்ளான்விடுதி உட்பட பல்வேறு கிராமங்களில் பல்வேறு வகையான மரங்கள் வளர்க்கப்பட்டு வந்தது. இந்நிலையில், கஜா புயலின் கோரதாண்டவத்தால், அனைத்து மரங்களும் வேரோடு சாய்ந்து வெறிச்சோடி காணப்படுகிறது. இந்நிலையில் விவசாயிகளையும், மாணவர்களையும் ஊக்கப்படுத்தி மீண்டும் மரக்கன்றுகளை நடவு செய்து வளர்க்க தூண்டும் விதமாக வனத்துறை சார்பில் சிறப்பு பயிற்சிகள் மற்றும் கருத்தரங்கம் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஆலங்குடி அருகேயுள்ள பனங்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மத்திய அரசின் நிதி உதவியுடன் தேசிய மருத்துவ தாவர வாரியத்தின் ஆயுஷ் திட்டத்தின் மூலம் மூலிகை கன்றுகள் வளர்ப்பது குறித்த பயிற்சி மற்றும் கருத்தரங்க விழா நடந்தது.

விழாவிற்கு, தோப்புக்கொல்லை வனச்சரக அலுவலர் மகேஷ்வரன் தலைமை வகித்தார். தலைமை ஆசிரியர் கருப்பையன், முன்னாள் ஊராட்சித் தலைவர் மோகன்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆசிரியர் இளங்கோ வரவேற்றார். விழாவில், மூலிகை வளர்ப்பு குறித்து இயற்கை வேளாண் முன்னோடி விவசாயி மேட்டுவயல் ஆனந்தராஜ் பயிற்சி அளித்தார். விழாவில் விவசாயிகள், மாணவ, மாணவிகள் பலர் கலந்துகொண்டனர்.
இதனைத்தொடர்ந்து, வனச் சரக அலுவலர் மகேஷ்வரன் பள்ளி வளாகத்தில் மரக்கன்று நடவு செய்து பேசுகையில், மரங்கள் வளர்ப்பது மிகவும் அவசியம். அதற்காக மத்திய, மாநில அரசுகள் இணைந்து பல்வேறு திட்டங்களில் விவசாயிகளுக்கும், மாணவர்களுக்கும் இலவசமாக மரக்கன்றுகளையும் மூலிகை கன்றுகளையும் வழங்கி வருகிறது. அதனால் கிராமங்களில் விவசாயிகள், மாணவர்கள் அவற்றை வாங்கி வளர்க்க முன்வர வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் இடம் ஒதுக்கி கொடுத்தால் மூலிகை தோட்டங்களை அமைத்து பராமரித்து வளர்க்க வனத்துறை தயாராக உள்ளது. அந்த அடிப்படையில் பள்ளிகள் முன்வர வேண்டும். மேலும் தற்போது புயலில் பாதிக்கப்பட்டுள்ள மரங்களை மீண்டும் பாதுகாப்பாக வளர்க்க முடியும். அதற்கான ஆலோசனைகளை பெற வனச்சரக அலுவலகத்திற்கு விவசாயிகள் நேரில் வரலாம். இவ்வாறு அவர் பேசினார். விழாவில் கலந்துகொண்ட விவசாயிகள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு சுமார் 2,500 தேக்கு, வேம்பு, புளி, பப்பாளி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் வழங்கப்பட்டது. மாணவர்களின் சுற்றுசூழல் மன்றத்தின் சார்பில் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும் நடந்தது.

× RELATED கடலூர் வனத்துறைக்கு சொந்தமான...