1 லட்சம் ஸ்மார்ட் கார்டுகளுக்கு 5 லட்சம் மருத்துவ காப்பீடு

சென்னை, ஜன. 10: பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளில் ஸ்மார்ட் கார்டு வைத்துள்ள 1 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் மருத்துவ காப்பீடு தொகைக்கான கடிதத்தை நேற்று முன்தினம் பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேதா சுப்பிரமணியன் வழங்கினார். பின்னர், பாஜ தேசிய பொதுக்குழு உறுப்பினரும், பெரும்புதூர் நாடாளுமன்ற பொறுப்பாளருமான  செம்பாக்கம் வேதா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: பெரும்புதூர் நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட அம்பத்தூர், மதுரவாயல், பெரும்புதூர், ஆலந்தூர், பல்லாவரம், தாம்பரம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளில் ஸ்மார்ட் ரேஷன் கார்டு வைத்துள்ள சுமார் 1 லட்சம் குடும்பங்களுக்கு தலா ₹5 லட்சம் மதிப்பீட்டில் மருத்துவ காப்பீடு கடிதம் வழங்கப்பட்டுவருகிறது. முகவரிகள் சரியாக இல்லாத காரணத்தால் அஞ்சல் நிலையத்தில் கடந்த 3 நாட்களாக சுமார் 80 சதவீதம் காப்பீடு அஞ்சல்கள் தேங்கி கிடக்கிறது. இவற்றை பயனாளிகளிடம் சேர்க்கும் ஏற்பாடுகளை பாஜகவினர் ஒருங்கிணைத்து வருகின்றனர். மத்திய அரசு இந்த காப்பீடு தொகையை ஏற்கனவே மருத்துவமனைகளுக்கு செலுத்திவிட்டது.
வருகிற 13ம் தேதி முதல் இந்த திட்டத்தின் பயன் பற்றியும், அதை பெறுவதற்கான வழிமுறையை பற்றியும் மக்களிடம் எடுத்து கூறும் வகையில் பாஜ சார்பில் விழிப்புணர்வு நடைபெறும்.இவ்வாறு அவர் கூறினார்.

× RELATED மொபைல் ஸ்கிரீனுக்கு வந்துவிட்டது காப்பீடு