மயிலாடுதுறை நகராட்சியை தனி மாவட்டமாக்க வேண்டும்

மயிலாடுதுறை, ஜன.10: மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரிக்கக்கோரி மயிலாடுதுறை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
1799ம் ஆண்டில் இருந்தே செயல்பட்டு வரும் தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து 1991ல்  நாகப்பட்டினம் மாவட்டம் பிரிக்கப்பட்டது.  நாகை மாவட்டத்தின் வடக்கு பகுதியில் உள்ள கொள்ளிடம் பழையாறு, மயிலாடுதுறையில் உள்ளவர்கள், நாகப்பட்டினத்துக்கு வரவேண்டுமென்றால், புதுச்சேரி மாநிலத்தின் காரைக்காலில் புகுந்து வரவேண்டி உள்ளது. இதற்கு சுங்கச்சாவடியில் நுழைவுவரி செலுத்த வேண்டியதுள்ளது. இதற்காக 4 மணிநேரம் வரை  பயணிக்க வேண்டியுள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் பல்வேறு துறை சார்ந்த வேலை சம்பந்தமாக மற்றும் சான்றிதழ் பெறுவது சம்பந்தமாக நாகைக்கு செல்ல மிகவும் சிரமப்படுகின்றனர். இதனால் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக பிரிக்கவேண்டும் என்று நீண்ட நாட்களாக மக்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

1997ல்  திருவாரூரை தலைமையிடமாகக் கொண்டு ஏடிபன்னீர்செல்வம் மாவட்டம் என்று  பிரிக்கப்பட்டது. அந்த நேரத்திலும் மயிலாடுதுறைக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை.  நிர்வாக வசதிக்காக பெரிய மாவட்டங்களை தமிழக அரசு பிரித்தது.  திருச்சி மாவட்டம், பெரம்பலூர் மற்றும் அரியலூர் மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது. அதுபோல கோவை மாவட்டம், ஈரோடு, திருப்பூர், நீலகிரி என்று தனித்தனியாக பிரிக்கப்பட்டது. நாகை மாவட்டத்தில் 15 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். நாகை மாவட்டம் மயிலாடுதுறையில் 9 லட்சத்து 45 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். சாலை போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதி என்று நாகை மாவட்டத்தில் முதன் முதலாக மயிலாடுதுறையில்தான் போக்குவரத்துக் காவல் பிரிவு ஏற்படுத்தப்பட்டது.  மயிலாடுதுறையுடன் ஒப்பிடும்போது, தனியாக பிரிக்கப்பட்ட அரியலூர் மாவட்டத்தில் 6 லட்சம் மக்கள் தொகை 3 தாலுகாக்கள் மட்டுமே உள்ளது.   ஆனாலும் 9.45 லட்சம் மக்கள் தொகை கொண்ட மயிலாடுதுறையில் 4 தாலுகாக்கள், 3 சட்டமன்ற தொகுதிகள், 5 ஓன்றியங்கள், 2 நராட்சிகள், 3 பேரூராட்சிகளைக் கொண்ட மயிலாடுதுறையை  தனி மாவட்டமாக அறிவிக்க   அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
 
125 ஆண்டு பழமைவாய்ந்த ரெயிவே ஜங்ஷன் உள்ள ஊர் மயிலாடுதுறை. தமிழறிஞர் நீதிபதி மாயூரம் வேதநாயகம்பிள்ளை வாழ்ந்து மறைந்த ஊர் மயிலாடுதுறை. புகழ்பெற்ற பழம்பெருமை வாய்ந்த தருமபுரம் மற்றும் திருவாவடுதுறை     ஆதீனங்களை கொண்டது.  கவிச்சக்கரவர்த்தி கம்பர் பிறந்து வாழ்ந்த பகுதி. நூலக தந்தை சீர்காழி ரெங்கநாதன் பிறந்து வாழ்ந்த பகுதி. சைவ, வைணவ தலங்கள் மட்டுமின்றி புராண வரலாறு கொண்ட 100க்கும் மேற்பட்ட ஆலயங்களை கொண்டது. பூம்புகார் மற்றும் தரங்கம்பாடி போன்ற வரலாற்று சுற்றுலா பகுதிகளைக் கொண்டது மயிலாடுதுறை.   
காவிரிப்படுகையைக் கொண்ட இந்த மயிலாடுதுறை கோட்டம் 150 ஆண்டுகால நகராட்சி வரலாறு கொண்டது.    பல்வேறு அடிப்படை காரணங்களுக்காக மயிலாடுதுறையை தலைநகராக கொண்ட, புதிய மாவட்டத்தை உருவாக்குவதற்கு    2004ம் ஆண்டு தமிழக அரசு கொள்கை அளவில் முடிவு செய்தது.

இந்நிலையில் சுனாமி பேரழிவு ஏற்பட்டது. இதனால் மயிலாடுதுறையை தனி மாவட்டமாக உருவாக்கும் பணியை அரசு தள்ளிவைத்தது.  பின்னர் 2011ம் ஆண்டு, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிக்கும் நடவடிக்கையை தமிழக அரசு எடுத்துக் கொண்டது. இதுதொடர்பாக வருவாய் நிர்வாகத்துறை கமிஷனருக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டார். அதனடிப்படையில் கடந்த 2013ம் ஆண்டு ஜூன் 9ம் தேதி நாகை கலெக்டருக்கு வருவாய் நிர்வாகத்துறை கமிஷனர் கடிதம் அனுப்பினார். தமிழக அரசும் நிர்வாக பிரிவுகள், தொகுதி பிரிவுகள் பற்றிய விவரங்களை அரசுக்கு அனுப்பி வைக்கும்படி மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டது. அதன்படி, மயிலாடுதுறையை தலைமை இடமாக கொண்ட புதிய மாவட்டத்தை அமைப்பதற்காக, கடந்த 2013ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி அரசுக்கு நாகை கலெக்டர் அனுப்பி வைத்தார். அதற்கு பிறகும் மயிலாடுதுறை மாவட்டத்தை பிரிப்பதற்கு தலைமை செயலாளர் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை.

இதுகுறித்து நீதிமன்றம் தலையிட்டு மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டமாக பிரிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பாஜகவின் மூத்த வழிக்கறிஞர் ராஜேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.    அவர் அளித்த மனுவை பரிசீலித்து, மயிலாடுதுறையை தனி மாவட்டமாக அறிவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கும்படி தலைமை செயலாளருக்கு உத்தரவிடவேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை தலைமை நீதிபதி எம்.ஒய்.இக்பால், நீதிபதி டி.எஸ்.சிவஞானம் ஆகியோர் விசாரித்தனர். தனிமாவட்டமாக ஆக்க உத்தரவிட முடியாது.  மனுதாரர் கொடுத்துள்ள மனுவை தலைமைச் செயலாளர் சட்டவிதிகளின்படி பரிசீலித்து தகுந்த உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்று உத்தரவிட்டனர், ஆனால் தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அந்தக் கோரிக்கை கிடப்பில் போடப்பட்டாலும் மயிலாடுதுறையில் உள்ள அனைத்துக் கட்சியினர்.

தன்னார்வ தொண்டு நிறுவனத்தினர், வர்த்தக சங்கத்தினர் போன்ற ஒட்டுமொத்த மக்களும் மயிலாடுதுறையை தலைமையிடமாகக் கொண்டு தனி மாவட்டத்தை உருவாக்கக்கோரி வருகின்றனர். தற்பொழுது 33 வது மாவட்டமாக உருவாக்கிய தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இதிலும் சிரத்தை எடுத்து மயிலாடுதுறையை மாவட்டமாக அறிவிக்க வேண்டும் என்று மயிலாடுதுறை பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

× RELATED மயிலாடுதுறை நகரில் திறந்தவெளியில் கிடக்கும் காலாவதியான மிட்டாய்கள்