பொங்கல் பரிசு நிறுத்தியதை கண்டித்து கிராம மக்கள் திடீர் சாலை மறியல்

பள்ளிப்பட்டு, ஜன.10: பள்ளிப்பட்டு அருகே ₹1000ம் ரொக்கப்பணத்துடன் வழங்கிய பொங்கல் தொகுப்பு திடீரென நிறுத்தப்பட்டது. இதை கண்டித்து கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 20 கிராம் முந்திரி, 20 கிராம்  உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் மற்றும் 2 அடி கரும்பு துண்டு அடங்கிய பரிசு தொகுப்பு மற்றும் ₹1000 ரொக்கம், வேட்டி, சேலைகள் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. இந்த தொகுப்பு வழங்கும் நிகழ்ச்சி கடந்த திங்கட்கிழமை தொடங்கியது.பள்ளிப்பட்டு வட்டத்தில் அம்மையார்குப்பம், வங்கனூர், பொதட்டூர்பேட்டை, பள்ளிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள ரேஷன் கடைகளில் திருத்தணி தொகுதி எம்.எல்.ஏ பி.எம்.நரசிம்மன்  பொங்கல் பரிசு பொருட்கள், ரொக்கம் ஆயிரம் ரூபாய் பொதுமக்களுக்கு வழங்கி தொடங்கி வைத்தார்.

தற்கிடையே  கஜா புயல் நிவாரணத்திற்கு போதிய அளவு பணம் இல்லாத பட்சத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாட்டத்துக்காக ₹1000 ரொக்கப்பணம் வழங்க தடை விதிக்க வேண்டும் என்று வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை நேற்று விசாரித்த நீதிபதிகள்,  வறுமை கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கு மட்டும் ரொக்கப் பணம் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என்று தீர்ப்பளித்தனர். இந்த தீர்ப்பை தொடர்ந்து நேற்று மதியத்துக்கு பிறகு பெரும்பாலான இடங்களில் பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் பணம் வழங்குவது நிறுத்தப்பட்டது.
இந்நிலையில் நெடியம் பகுதியிலும் பொங்கல் பரிசு மற்றும் ரொக்கப்பணம் விநியோகிப்பதை நிறுத்திவிட்டு, ரேஷன் கடையை மூடிவிட்டு ஊழியர்கள் சென்றுவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் பள்ளிப்பட்டு-நகரி சாலையில் நெடியம் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் திரண்டனர். பொங்கல் பரிசு பொருட்கள் மற்றும் ரொக்கப்பணம் பணம் ₹1000ம் வழங்க வலியுறுத்தி சாலைமறியலில் ஈடுபட்டனர். வாகன போக்குவரத்து தடைபட்டதால் பதற்றம் நிலவியது.
இதுகுறித்து தகவலறிந்ததும் பள்ளிப்பட்டு எஸ்.ஐ கண்ணையன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். சாலைமறியலில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது எஸ்.ஐ  கண்ணையன்,  நாளை (இன்று) காலை முதல் பரிசு பொருட்களுடன் ரொக்கப்பணம் வழங்க உயர் அதிகாரிகளுடன் பேசி  நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
இதையடுத்து மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். பொதுமக்களின் திடீர் சாலைமறியலால் அந்த பகுதியில்  அரை மணிநேரம் போக்குவரத்து பாதித்தது.

× RELATED கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்ட கிராம மக்கள்