கஜா புயல் கடந்து 55 நாட்களாகியும் நிவாரணம் பெற அலைவது குறைந்தபாடில்லை வேதாரண்யம் தாலுகா பகுதியில் வேதனை

வேதாரண்யம், ஜன.10: வேதாரண்யம் தாலுகா பகுதிகளில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசு வழங்கும் நிவாரணத் தொகை மற்றும் நிவாரணப் பொருட்கள் கிடைக்காததால் பொதுமக்கள் மக்கள் தாலுகா அலுவலகத்திற்கும், விஏஓ அலுவலகங்களுக்கும், வங்கிகளுக்கும், அலைந்த வண்ணம் உள்ளனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதி மக்களுக்கு அரசு அறிவித்த நிவாரண பொருட்கள் மற்றும் நிவாரணத் தொகை வழங்கப்பட்டு வருகின்றன. வீடுகள் பாதிப்பு கணக்கெடுக்கும் போது விஏஓக்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்ததால் கிராம உதவியாளர்கள் உதவியுடன் அரசின் மற்ற துறைகளை சேர்ந்த வெளியூர் அலுவலர்கள் கணக்கெடுப்பு பணியில் ஈடுபடுட்டனர். அவசர நிலையில் எடுக்கப்பட்ட பட்டியலில் பயனாளிகளின் பெயர்கள் அதிகளவில் விடுபட்டுள்ளது. கூரை வீடுகளின் முழு பாதிப்பிற்கு பத்தாயிரமும், பகுதி பாதிப்பிற்கு ரூ.5,500ம், மாடிவீடு, ஓட்டுவீடுகள் பாதிப்பிற்கு ரூ. 5,200 வீதமும் பயனாளிகள் வங்கி கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளன. நிவாரணத் தொகை வங்கிக் கணக்குகளில் செலுத்தப்பட்டவர்களுக்கு வாழ் வாதாரத் தொகையாக மீண்டும் ரூ.5 ஆயிரம் வழங்கப்பட்டுள்ளது.

நிவாரணத் தொகை வங்கியில் செலுத்தப்பட்ட பட்டியிலில் உள்ளவர்களுக்கு அரசு அறிவித்த 27 பொருட்களும் அளிக்கப்பட்டுள்ளன. ஆனால் பட்டியலில் விடுபட்டது. வங்கி கணக்கு எண் அல்லது ஆதார் எண் குறிப்பிடுவதில் நேர்ந்த தவறு, இணைய சேவை குறைபாடு போன்ற பல்வேறு காரணங்களால் சுமார் 40 சதவீதம் பயனாளிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. நிவாரணம் கிடைக்காதவர்களில் பெரும்பாலானவர்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். நாள்தோறும் வங்கிகளுக்கு சென்று வரிசையில் நின்று தனது வங்கிக் கணக்கில் பணம் செலுத்தப்பட்டுள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளவும், அவ்வாறு பணம் செலுத்தப்பட்டிருந்தால் அதை எடுப்பதில் உள்ள பிரச்னைகளாலும் மக்கள் நாள்தோறும் அவதிபட்டு வருகின்றனர்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களில் பலர் தாசில்தார் அலுவலகத்தில் நேரில் சென்று விசாரிப்பது, மனு அளிப்பது தொடர்கதையாகி வருகிறது. பணம் கிடைக்காமல் போனதற்கான காரணம் தெரியாமல் மனுக்களை எழுதி ஆவணங்களை நகல் எடுத்து இணைத்து கொடுத்து விட்டு காத்திருப்பதும், எந்த அலுவலரிடம் கேட்பது என தெரியாமல் அலுவலக வளாகத்திலேயே பசியுடன் காத்திருந்து அவதிப்படுகின்றனர்.
நிவாரணம் கிடைக்காதவர்களால் அளிக்கப்படும் மனுக்களை தானியாக பதிவேடுகள் பயன்படுத்தி பதிவு செய்யப்படாததால் மனுக்கள் கேள்விக்குறியாக உள்ளன. மேலும் மாடிவீட்டில் குடியிருப்பவர்களுக்கும் கூரை வீட்டிற்கான நிவாரணத் தொகை பல இடங்களில் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. உண்மையாகவே கூரைவீட்டில் இருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்காமல் கடந்த 50 நாட்களாக அலுவலகத்திற்கும் வங்கிகளுக்கும் அலைவது மிகுந்த வேதனை அளிக்கிறது.

புயல் பாதிப்பால் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்த பொதுமக்கள் நிவாரணம் தேடி அலைவதால் கூலிவேலைக்கு கூட சென்று சம்பாதிக்க முடியாமலும் தங்கள் அன்றாட வருமானத்தை இழந்தும் வேதனைப்படுகின்றனர். உடன் மாவட்ட கலெக்டர் நேரடியாக கவனம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுத்து பாதிக்கப்பட்ட அனைவருக்கும் முறையாக நிவாரணம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என கஜா புயலால் பாதிக்கப்பட்ட வேதாரண்யம் பகுதி மக்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

× RELATED தனுஷ்கோடி கடற்கரையோரத்தில் கடல் அரிப்பில் தெரிவது புயல் அழித்த சாலையா?