கிழக்கு தாம்பரம் பகுதி ரேஷன் கடையில் பொங்கல் பரிசு, ரூ.1000 வழங்கியதில் முறைகேடு

தாம்பரம்: கிழக்கு தாம்பரத்தில் உள்ள ரேஷன் கடையில் தமிழக அரசு வழங்கும் பொங்கல் பரிசு பொருட்களை போலி கையெழுத்து போட்டு சுருட்டியது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னை, கிழக்கு தாம்பரம் பஜனைகோயில் தெருவை சேர்ந்தவர் சைமன் பீட்டர் (64). தொழிலதிபர். கடந்த 26 ஆண்டுகளாக கிழக்கு தாம்பரத்தில், தனியாக வசித்து வருகிறார். கோயம்புத்தூரிலுள்ள இவரது குடும்பத்தினரை பார்க்க, சைமன் வாரம்  ஒருமுறை சென்று வருவார்.கடந்த சில நாட்களுக்கு முன்பாக சைமன் தாயாருக்கு உடல் நிலை சரியில்லாததால் சைமன் கோயம்புத்தூர் சென்றார். நேற்று முன்தினம் அவரது செல்போன் எண்ணிற்கு ஒரு குறுந்தகவல் வந்துள்ளது. அதில் அவர் பொங்கல் பரிசு மற்றும் ஆயிரம் ரூபாய் பணம் பெற்றுவிட்டதாக குறிப்பிட்டு இருந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் தாம்பரம் நகராட்சி 24வது வார்டு முன்னாள் திமுக கவுன்சிலர் ஜோதிகுமாரை தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ஜோதிகுமார் தாம்பரம் திமுக எம்எல்ஏ எஸ்.ஆர்.ராஜாவிடம் தெரிவித்தார். இதையடுத்து ஜோதிகுமார் கிழக்கு தாம்பரம், பரலி நெல்லையப்பர் தெருவில் உள்ள கே.டி.020 கணபதிபுரம் ரேஷன் கடையில் சென்று விசாரித்தபோது பணியில் இருந்த ஊழியர் பாலகிருஷ்ணன் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்து உள்ளார். மேலும், சம்பந்தப்பட்ட நபர் பொருட்களை வாங்கி சென்றாரா? என இந்த கருவியில் பார்க்க முடியாது என தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து ஜோதிகுமார் அங்கு பொருட்கள் வாங்கிக்கொண்டு பொதுமக்கள் கையெழுத்திட்டு சென்ற ரிஜிஸ்டர் புத்தகத்தை எடுத்து பார்த்தபோது அதில் சைமன் பீட்டர் பொருட்கள் மற்றும் ஆயிரம் ரூபாய் வாங்கிச்சென்றதுபோல் பதிவிட்டு போலி கையெழுத்திட்டு இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து சம்பவம் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டுள்ளது.
இதேப்போல் ரேஷன் பொருட்கள் நீண்ட நாட்கள் வாங்காமல் இருப்பவர்கள், வெளி ஊர்களுக்கு சென்றுள்ளவர்கள் என பெரும்பாலானவர்களின் ரேஷன் ஸ்மார்ட் கார்டு எண்ணை பயன்படுத்தி ரேஷன் கடை ஊழியர்கள் சம்பந்தப்பட்ட நபர்கள் பொருட்களை வாங்கியதுபோல கணக்குக்காட்டி மோசடி செய்துவந்தது தெரியவந்துள்ளது.

ஊழியர் மீது நடவடிக்கை
இதுகுறித்து அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘‘சம்பவம் குறித்து புகார் வந்துள்ளது. சம்பந்தப்பட்ட கடையில் ஆய்வு செய்ய அதிகாரிகள் சென்றுள்ளனர். அவர்கள் அளிக்கும் அறிக்கையை கொண்டு, அதில் தவறுகள் உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

× RELATED பாலாற்றில் தடுப்பணை கட்டாமல் இலவச...