விமான நிலையத்தில் ரூ.7 லட்சம் நகைகள் கடத்திய பெண் கைது

சென்னை: மலேசியா தலைநகர் கோலாலம்பூரில் இருந்து ஏர் ஏசியா விமானம் நேற்று முன்தினம் இரவு 11.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் வந்த பயணிகளை, சுங்க அதிகாரிகள் சோதனை செய்து அனுப்பினர்.அப்போது, சென்னையை சேர்ந்த கயருனிஷா (42) என்பவர் சுற்றுலா பயணியாக மலேசியா சென்று திரும்பினார். அவர், தன்னிடம் சுங்கத்தீர்வை செலுத்தும் பொருட்கள் எதுவும் இல்லை என கூறி, கிரீன் சேனல் வழியாக வெளியே செல்ல முயன்றார்.இதனால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் அவரை நிறுத்தி, அவரிடம் இருந்த உடமைகளை சோதனையிட்டனர். அதில் எதுவும் இல்லை. பின்னர், பெண் சுங்க அதிகாரிகளை வரவழைத்து, தனி அறையில் கயருனிஷாவை தீவிரமாக சோதனை செய்தனர்.அப்போது அவரது சேலை மடிப்பில் 6 புத்தம் புதிய தங்க செயின்கள் மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து பறிமுதல் செய்தனர். அதன் சர்வதேச மதிப்பு ₹7 லட்சம். எனவே அவரை கைது செய்த அதிகாரிகள் தொடர்ந்து விசாரிக்கின்றனர்.

× RELATED சிறுமிக்கு பாலியல் தொல்லை முதியவர் போக்சோவில் கைது