காதல் தகராறில் விபரீதம் : ரயில் முன்பு பாய்ந்து இளம்பெண் தற்கொலை

வியாசர்பாடி: சென்னை வியாசர்பாடி எஸ்ஏ காலனியை சேர்ந்தவர் முனுசாமி. கூலித்தொழிலாளி. இவரது மகள் காமேஸ்வரி (19). கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு பாரிமுனையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.வியாசர்பாடி பாலகிருஷ்ணன் தெருவை சேர்ந்தவர் சுப்பிரமணி (எ) சுந்தர் (19). சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாண்டு படிக்கிறார். காமேஸ்வரியும், சுப்பிரமணியும் பள்ளியில் படிக்கும் காலத்தில் இருந்து காதலித்து வந்தனர்.இவர்களது காதல் விவகாரம், இரு வீட்டு பெற்றோருக்கும் தெரியவந்தது. இதனால், அவர்களை கண்டித்துள்ளனர். ஆனாலும், காதல் ஜோடி அடிக்கடி சந்தித்துள்ளனர்.

நேற்று காலை கடற்கரை சந்திப்பு ரயில் நிலையம் செல்ல காதல் ஜோடி முடிவு செய்தது. இதற்காக 2 பேரும், வியாசர்பாடி ஜீவா ரயில் நிலையம் வந்தனர். அங்கு நீண்ட நேரம், பிளாட்பாரத்தில் பேசி கொண்டிருந்தனர்.அப்போது அரக்கோணத்தில் இருந்து சென்னை சென்ட்ரல் நோக்கி மின்சார ரயில் வந்து கொண்டிருந்தது. காதல் ஜோடி பேசிக்கொண்டிருந்தபோது அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டு, கடும் வாக்குவாதம் நடந்தது.இதனால் ஆத்திரமடைந்த கமேஸ்வரி திடீரென ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதில், அவரது தலை துண்டாகி தண்டவாளத்தில் ஒரு பகுதியிலும், உடல் மறு பகுதியிலும் விழுந்தது. இதை பார்த்ததும், ரயிலுக்காக காத்திருந்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே, வாலிபர் சுப்பிரமணியை பிடித்து தர்மஅடி கொடுத்தனர். தகவலறிந்து, பெரம்பூர் ரயில்வே போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதற்கிடையில், பொதுமக்களிடம் சிக்கி இருந்த சுப்பிரமணியை மீட்டு காவல் நிலையம் கொண்டு சென்றனர். தொடர்ந்து வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனர்.

× RELATED மாற்றுத்திறனாளிகளுக்கு பேரிடர் குறைதீர் கூட்டம்