ரவுடி கொலையில் மேலும் இருவர் கைது

புழல்: சோழவரம் ஏரியில் ரவுடி திவாகர் கொலை செய்யப்பட்ட வழக்கில் மேலும் 2 பேரை போலீசார் கைது செய்தனர். முன்விரோதம் காரணமாக அவரை வெட்டிக்கொன்றதாக கூட்டாளிகள் வாக்குமூலம் அளித்துள்ளனர். சென்னை வியாசர்பாடி, கரிமேடு, பி.வி.காலனி 2வது தெருவை சேர்ந்தவர் திவாகர் (22). பிரபல ரவுடி. இவர் மீது எம்கேபி நகர் உள்ளிட்ட பல்வேறு காவல் நிலையங்களில் கொலை முயற்சி, வழிப்பறி கொள்ளை வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்நிலையில் கடந்த மாதம் 30ம் தேதி சோழவரம் ஏரியில் காற்றாடிவிடலாம் என திவாகரிடம் கூறி, அவரை அங்கு கூட்டாளிகள் அழைத்துச் சென்றனர். பின்னர் அவருக்கு அதிகளவு மது ஊற்றிக் கொடுத்துள்ளனர். இதில் திவாகர் குடிபோதையில் இருந்தபோது, அவரது கூட்டாளிகள் கத்தியால் சரமாரியாக வெட்டிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் திவாகர் பரிதாபமாக பலியானார்.
 
இதுதொடர்பாக சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த ஞயிற்றுக்கிழமை செங்குன்றம் பாலமுருகன் நகரை சேர்ந்த சுரேஷ் (எ) குதிரை சுரேஷ் (24) என்பவரை கைது  செய்தனர். விசாரணையில் சுரேஷ் கொடுத்த தகவலின்பேரில் திவாகர் குடியிருந்த பகுதியை சேர்ந்த கணேஷ் (எ) தொப்பை கணேஷ் (28), அறிவழகன் (24) ஆகிய 2 பேரை நேற்று முன்தினம் சோழவரம் போலீசார் கைது செய்தனர். விசாரணையில், எங்களுக்கு இடையே ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக திவாகர் எங்களை கொலை செய்ய திட்டமிட்டார். அதற்கு முன்னதாக, அவருக்கு மது விருந்து அளித்து கொலை செய்தோம் என வாக்குமூலம் அளித்திருப்பதாக கூறப்படுகிறது. பின்னர் அவர்களை பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

× RELATED ரவுடி கொலையில் 6 பேர் கைது பழிக்கு...