நீதிமன்றம் உத்தரவு எதிரொலி பொங்கல் பரிசுத் தொகுப்பு திடீர் நிறுத்தம்

திருவண்ணாமலை, ஜன.10: பொங்கல் பண்டிகைக்கான பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கு, சென்னை உயர்நீதிமன்றம் விதித்த கட்டுப்பாடு காரணமாக, திருவண்ணாமலை மாவட்டத்தில் ரேஷன் கடைகள் நேற்று மதியம் அவசர, அவசரமாக மூடப்பட்டது. தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் அரிசி பெறும் ரேஷன் கார்டு வைத்துள்ள அனைத்து குடும்பங்களுக்கும், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்க தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, ஒவ்வொரு குடும்பத்துக்கும் தலா 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, இரண்டு அடி நீள கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்கத் தொகை ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டது.

கடந்த 7ம் தேதி முதல் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணி தொடங்கியது. ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ரேஷன் கார்டுகளுக்கு பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என ரேஷன் கடைகளில் பட்டியல் ஒட்டினர். காலை 8.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரையும், மதியம் 1.30 மணி முதல் 5.30 மணி வரை ரேஷன் கடைகள் செயல்பட்டன. விடுபட்டவர்கள், வரும் 13 மற்றும் 14ம் தேதிகளில் பெற்றுக்கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிலையில், வறுமைக் கோட்டிற்குகீழ் உள்ளவர்களுக்கு மட்டும் பொங்கல் பரிசுத் தொகுப்பு மற்றும் ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது. இந்த உத்தரவு குறித்த தகவல் வெளியானதும், ரேஷன் கடைகளில் பொங்கல் சிறப்பு தொகுப்பு வழங்குவதை நிறுத்துமாறு விற்பனையாளர்ளுக்கு உயர் அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

அதன்படி, மதியம் 1 மணியளவில் மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளும் அவசர அவசரமாக மூடப்பட்டது. பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பை வாங்குவதற்காக, நீண்ட வரிசையில் காத்திருந்த பொதுமக்கள் இதனால் ஏமாற்றம் அடைந்தனர். வரிசையில் காத்திருப்போருக்கு மட்டுமாவது வழங்குமாறு விற்பனையாளர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஆனாலும், அரசின் முறையான வழிகாட்டுதல் உத்தரவும், பயனாளிகள் பட்டியலும் தங்களுக்கு கிடைத்தால் மட்டுமே, தொடர்ந்து பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க முடியும் என விற்பனையாளர்கள் கைவிரித்தனர். மேலும், எந்த நேரத்தில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது என்பது, ஸ்மார்ட் கார்டை ஸ்கேன் செய்ததும் பதிவாகும் என்பதால், இனிமேல் பொருட்கள் வழங்க முடியாது என்றனர். அதனால், பரிசுத்தொகுப்பு பெற வரிசையில் காத்திருந்தோறும், இதுவரை இதனை பெறாதவர்களும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

× RELATED திருவள்ளூர் பஸ்டெப்போ அருகே பஸ்...