பேரணாம்பட்டில் புதிய பஸ் நிலையம் கலெக்டர் தலைமையில் நடந்த கருத்துக் கேட்பு கூட்டத்தில் கூச்சல் குழப்பம்

வேலூர், ஜன.10: பேரணாம்பட்டில் புதிய பஸ்நிலையம் கொண்டு வருவது தொடர்பாக கலெக்டர் தலைமையில் நடந்த கருத்து கேட்பு கூட்டத்தில் கூச்சல் குழப்பத்தில் ஒருவர் தீக்குளிப்பேன் என கூறியதால் பரபரப்பு ஏற்பட்டது. பேரணாம்பட்டில் புதிய பஸ் நிலையம் கொண்டு வருவது குறித்து கருத்துக்கேட்பு கூட்டம் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ராமன் தலைமையில் நேற்று நடந்தது. டிஆர்ஓ பார்த்திபன் முன்னிலை வகித்தார். சப்-கலெக்டர் மெகராஜ் வரவேற்றார். அப்போது புதிய பஸ் நிலையம் கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு பிரிவினரும், ஆதரவு தெரிவித்து மற்றொரு பிரிவினரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

ஒரு பிரிவினர் பேசுகையில், ‘புதிய பஸ் நிலையம் வேண்டாம். இருக்கின்ற பஸ் நிலையம் போதுமானது. புதிய பஸ் நிலையம் வந்தால், வியாபாரம் பாதிக்கப்படும். பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்’ என்று தொடர்ந்து கூறி வந்தார். அதற்கு மற்றொரு பிரிவினர் எழுந்து நின்று எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால் இருதரப்பினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு கூச்சல் குழப்பம் ஏற்பட்டது. இதையடுத்து கலெக்டர் ராமன் இருதரப்பினரையும் சமாதானம் செய்தார். தொடர்ந்து ஒருதரப்பை சேர்ந்த ஒருவர் கூச்சலிட்டார். இதனால் கோபம் அடைந்த கலெக்டர் அவரை வெளியேற்றுமாறு காவல்துறைக்கு உத்தரவிட்டார்.

இதைதொடர்ந்து ஆதரவாக மற்றொரு தரப்பில் இருந்து ஒருவர் பேசுகையில், ‘தற்போதுள்ள பஸ் நிலையம் இடநெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. ஆம்புலன்ஸ் கூட சென்று வர முடியாத அளவுக்கு உள்ளது. காலத்திற்கு ஏற்ப வளர்ச்சி பெற வேண்டும் என்றால் புதிய பஸ் நிலையம் கட்டாயம் தேவை. அதேபோல் புதிய பஸ் நிலையம் கொண்டு வந்தாலும், பழைய பஸ் நிலையத்தை பயன்படுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார். அதற்கு அவரது தரப்பினர் கைத்தட்டி வரவேற்றனர்.

தொடர்ந்து கலெக்டர் ராமன் பேசுகையில், ‘பேரணாம்பட்டில் லெதர் தொழிற்சாலைகள் உள்ளன. வளர்ச்சியடைந்து வரும் நகராட்சியாக உள்ளது. அதற்கு ஏற்ப மாற்ற வேண்டும். சிலர் சுய நலத்திற்காக இதை தடுக்கக் கூடாது. இவர்கள் தனது மனநிலையை மாற்றி கொள்ள வேண்டும். பஸ் நிலையம் அமைய உள்ள பகுதியில்தான் தாலுகா அலுவலகம் உள்ளது. மேலும் பிடிஓ, வேளாண்மை அலுவலகம் வர உள்ளது. இந்த பஸ் நிலையத்தால் நகரம் வளர்ச்சி பெறும். அதற்கு உங்களுடைய கருத்துக்களை தெரிவிக்க வேண்டும்’ என்றார்.

இதையடுத்து கூட்டத்தில் இருந்த ஒரு சிலர் கலெக்டர் ஒரு தரப்பினருக்கு மட்டுமே சாதகமாக பேசுவதாக கூறி கூச்சலிட்டனர். இதையடுத்து அவர்களை வெளியே செல்லுமாறு கலெக்டர் கூறினார். பின்னர் அவர்கள் வெளிய கிளம்பி சென்றனர். பின்னர் ஒருவர் பேசுகையில், ‘புதிய பஸ் நிலையம் கொண்டு வரவில்லை என்றால் நான் தீக்குளிப்பேன்’ என ஆவசேமாக பேசினார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனே கலெக்டர் குறுக்கிட்டு, ‘இதுபோன்று பேசக்கூடாது’ என்றார். தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துகளை தெரிவித்தனர்.

× RELATED பேரணாம்பட்டு அருகே சோகம் தண்ணீர்...