திருவண்ணாமலையில் சென்னை வாலிபர் கொலை வழக்கு ; இளம்பெண் பரபரப்பு வாக்குமூலம்

திருவண்ணாமலை, ஜன.9: திருவண்ணாமலையில் சென்னை வாலிபர் கொலை வழக்கில் கோர்ட்டில் சரணடைந்த இளம்பெண், மகனை கொன்றதற்கு பழிதீர்க்க கூலிப்படையை ஏவி கொலை செய்ததாக போலீசில் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னையைச் சேர்ந்தவர் நாகராஜ்(27). இவர் திருவண்ணாமலை ஐயங்குளத் தெருவில் கடந்த மாதம் 29ம் தேதி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, சென்னை எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த கார்த்திகேயன் மனைவி மஞ்சுளா(37), சூளைமேடு தினேஷ்குமார்(20), அரும்பாக்கத்தைச் சேர்ந்த சாம்சுந்தர்(24), சந்தோஷ்குமார்(23), அசோக்நகர் சரவணன்(25) ஆகியோர் கடந்த 31ம் தேதி சென்னை ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் சரணடைந்தனர். மேலும், சஞ்சய் என்பவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், 5 பேரையும் நேற்றுமுன்தினம் 4 நாள் போலீஸ் காவலில் விசாரிக்க மாஜிஸ்திரேட் விக்னேஷ்பிரபு அனுமதித்தார். போலீசார் விசாரணையில் மஞ்சுளா கூறியதாக போலீசார் தெரிவித்ததாவது: நாகராஜ் அடிக்கடி எங்கள் வீட்டிற்கு வருவார். அப்போது ஓரிரு உதவிகள் செய்வார். இதனால் நான் அவரிடம் நட்பாக பழகி வந்தேன். இதனை நாகராஜ் தவறாக பயன்படுத்திக்கொள்ள முயன்றார். இதை எனது கணவரிடம் தெரிவித்தேன். பின்னர், நாங்கள் நாகராஜ் மீது போலீசில் புகார் அளித்தோம்.
இதற்கிடையில் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 8ம் தேதி டியூசனுக்கு சென்ற எனது மகன் காணாமல் போனான். மார்ச் 1ம் தேதி சடலமாக மீட்கப்பட்டான். அப்போது, போலீசில் புகார் செய்த ஆத்திரத்தில் இருந்த நாகராஜ் எனது மகனை கொலை செய்தது தெரியவந்தது. டியூசனுக்கு சென்ற எனது மகனை சாக்லெட் தருவதாக கூறி பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்து சென்று அங்கு மது குடித்துவிட்டு அந்த பாட்டிலால் எனது மகன் தலையில் தாக்கியும், இரும்பு ராடால் அடித்தும் கொலை செய்துள்ளான். இதனால் ஆத்திரமடைந்த நான், நாகராஜையும் அதேபோல் துடிக்கத்துடிக்க கொலை செய்ய வேண்டும் என திட்டமிட்டேன். இதற்காக ஒரு கும்பலிடம் ₹2 லட்சம் கொடுத்து கள்ளத்துப்பாக்கி வாங்கி தரும்படி கூறினேன். ஆனால் அவர்கள் என்னிடம் பொம்மை துப்பாக்கி கொடுத்துவிட்டு ஏமாற்றினர். இந்த தகராறில் நான் போலீசில் சிக்கி பின்னர் ஜாமீனில் வெளியே வந்தேன். இருப்பினும் நாகராஜை கொலை செய்தே ஆகவேண்டும் என ஆத்திரத்தில் இருந்தேன். இதனால் கூலிப்படைக்கு ₹20 லட்சம் கொடுத்து அவர்கள் மூலம் நாகராஜை கொலை செய்தேன். இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியதாக போலீசார் தெரிவித்தனர். தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.


× RELATED மதுரை கொலை வழக்கில் தொடர்பு திருப்பூரில் சிறுவன் கைது