பொங்கல் பரிசு பொருட்களில் முந்திரி இல்லாததால் ரேஷன் கடை மூடல் ; பொதுமக்கள் மறியல் முயற்சி

செய்யாறு, ஜன.9: செய்யாறு அருகே பொங்கல் பரிசு பொருட்களில் முந்திரி இல்லாததால் ரேஷன் கடை மூடப்பட்டது. அப்போது பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு வள்ளலார் தெருவில் கற்பகம் கூட்டுறவு ரேஷன் கடை இயங்கி வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன்கார்டுதாரர்களுக்கு பொங்கல் பண்டிகை முன்னிட்டு பரிசு பொருட்கள் அடங்கிய பை வழங்கப்படுகிறது. இதை வாங்குவதற்காக நேற்று காலை 9 மணியளவில் பொதுமக்கள் ரேஷன் கடைக்கு சென்றனர். ஆனால் கடையின் ஷெட்டரில் ‘முந்திரி, திரட்சை இல்லாத காரணத்தால் ரேஷன் கடை புதன்கிழமை (இன்று) திறக்கப்படும்' என நோட்டீஸ் ஒட்டப்பட்டிருந்தது. இதைபார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், அதிகாரிகளை தொடர்பு கொண்டபோது உரிய பதில் கூறவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் ஆற்காடு சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனர்.
தகவலறிந்த செய்யாறு போலீசார் சம்பவ இடத்திற்கு ெசன்று பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், முந்திரி, திராட்சை இல்லாவிட்டாலும், வழக்கமாக அரிசி, சர்க்கரை, கோதுமை ஆகியவற்றை வழங்கலாம். ஆனால் அதை கூட வழங்காமல் மூடியுள்ளனர். கடந்த 5 மாதங்களாக வாரத்தில் ஒருசில நாட்கள் மட்டுமே ரேஷன் கடை திறக்கப்படுகிறது என குற்றம் சாட்டினர். அப்போது போலீசார் வட்ட வழங்கல் அலுவலர் அப்பாராவிற்கு தகவல் தெரிவித்தனர். அவரது உத்தரவின்பேரில் காலை 11 மணியளவில் சேல்ஸ்மேன் ஆனந்த் கடையை திறந்தார். பொங்கல் பரிசுக்கு பதில் வழக்கமான ரேஷன் பொருட்களை கொடுத்தார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. செய்யாறில் உள்ள 10க்கும் மேற்பட்ட கடைகளில் பொங்கல் பரிசு தொகுப்பு பைகள் தயார் செய்வதால் நேற்று கடைகள் திறக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


× RELATED ரேஷன் கடையை உடைத்து பொருட்கள் துணிகர திருட்டு