குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

திருவண்ணாமலை, ஜன.9: திருவண்ணாமலை அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் கிராமமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை அடுத்த துரிஞ்சாபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட மங்கலம் கிராமத்தில் ஜேஜே நகர் பகுதி உள்ளது. இந்த பகுதியில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு குடிநீர் விநியோகம் செய்யப்படும் ஆழ்துளை கிணற்றில் உள்ள மின் மோட்டார் பழுதடைந்ததாக கூறப்படுகிறது.இதனால் இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடந்த 2 வாராங்களாக குடிநீருக்காக அலைமோதும் நிலை ஏற்பட்டது. இதனால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தனர். இருப்பினும் அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இதனால் ஆத்திரமடைந்த கிராம பொதுமக்கள் நேற்று காலை குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காத அதிகாரிகளை கண்டித்தும், குடிநீர் கேட்டும் திருவண்ணாமலை-அவலூர்பேட்டை சாலையில் காலிக்குடங்களுடன் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மங்கலம் காவல் நிலைய சப்-இன்ஸ்பெக்டர் சத்தியநாதன் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது குடிநீர் பிரச்னையை தீர்க்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனர். இதை தொடர்ந்து மறியலில் ஈடுபட்ட அனைவரும் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். குடிநீர்கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் திடீரென மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

× RELATED குடிநீர் வாரியம் மூலம் வழங்கப்படும்...