நாடு தழுவிய 2 நாட்கள் வேலை நிறுத்தம் : போக்குவரத்தில் பாதிப்பு இல்லை

திருவண்ணாமலை, ஜன.9: நாடு தழுவிய இரண்டு நாட்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தால், திருவண்ணாமலை மாவட்டத்தில் அரசு அலுவலக பணிகள் முடங்கியது. தேசிய அளவிலான தொழிற்சங்கங்கள் ஒருங்கிணைந்து 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தும் இரண்டு நாட்கள் நாடு தழுவிய வேலை நிறுத்தப் போராட்டம் நேற்று தொடங்கியது. சம வேலைக்கு சம ஊதியம், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துதல், தொழிலாளர் சட்டங்களை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்துதல் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக இந்த போராட்டம் நடக்கிறது.நாடு தழுவிய அளவில் நடைபெறும் மத்திய அரசு ஊழியர்களின் இந்த வேலை நிறுத்தப் போராட்டத்தில், தமிழக அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், பொதுத்துறை நிறுவன ஊழியர்கள் ஆகியோரும் பங்கேற்பதாக அறிவித்திருந்தனர்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் நேற்று வருவாய்த்துறை அலுவலகங்கள், ஊரக வளர்ச்சித்துறை அலுவலகங்களில் பெரும்பாலான ஊழியர்கள் பணிக்கு வரவில்லை.

எனவே, திருவண்ணாமலை, செங்கம், தண்ராம்பட்டு, ஆரணி, கலசபாக்கம், கீழ்பென்னாத்தூர், போளூர், சேத்துப்பட்டு, செய்யாறு, வெம்பாக்கம், வந்தவாசி மற்றும் ஜமுனாமரத்தூர் தாலுகா அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடியது.மேலும், திருவண்ணாமலை, ஆரணி, செய்யாறு, வந்தவாசி உள்ளிட்ட 18 பிடிஓ அலுவலகங்களும் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடி காணப்பட்டது. சில அலுவலகங்கள் பூட்டப்பட்டிருந்தன. அதேபோல், கலெக்டர் அலுவலகத்திலும், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அலுவலகத்திலும் ஊழியர்கள் வருகை குறைந்திருந்தது. மாவட்ட அளவிலான உயர் அதிகாரிகள் மட்டுமே பணியில் ஈடுபட்டிருந்தனர். அரசு அலுவலக பணிகள் முடங்கியதால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர்.

அரசு போக்குவரத்து கழகத்தில் பணிபுரியும் தொழிற்சங்க நிர்வாகிகள் பணிக்கு வரவில்லை. ஆனாலும், பெரும்பாலான பஸ்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன. தனியார் பஸ்கள், ஆட்டோக்கள், லாரிகள் போன்றவை வழக்கம் போல இயங்கிதால், போக்குவரத்தில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை.
பொதுத்துறை வங்கிகளில், உயர்நிலை அதிகாரிகள் மட்டுமே பணிக்கு வந்திருந்தனர். எனவே, பெரும்பாலான வங்கிகளில் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடின. பணபறிவர்த்தனைகள் நடைபெறவில்லை. காசோலை மாற்றம், வங்கி வரைவோலை போன்ற பணிகள் நடைபெறாததால், வாடிக்கையாளர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.ஆசிரியர்களும் இந்த போராட்டத்தில் பங்கேற்பதாக பல்வேறு சங்கங்கள் அறிவித்திருந்தன. ஆனால், மாவட்டம் முழுவதும் 90 சதவீதத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் வழக்கம் போல பள்ளிகளுக்கு சென்றனர். எனவே, வகுப்புகளை நடத்துவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படவிலலை.
மேலும், தபால் நிலையில் பெரும்பாலான ஊழியர்கள் பணியை புறக்கணித்தனர். எனவே, தபால் நிலையங்கள் வெறிச்சோடி காணப்பட்டது. திருவண்ணாமலை தலைமை தபால் நிலையத்தில் இயங்கும் பாஸ்போர்ட் சேவை மையத்தில், நேற்றும் இன்றும் பாஸ்போர்ட் விண்ணப்ப நேர்காணல் ஆன்லைன் முன்பதிவு செய்திருந்தவர்களுக்கு வேறு தினங்கள் ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

× RELATED கொல்கத்தாவில் அரசு மருத்துவர்கள்...