பணி நீக்கம் செய்ததை கண்டித்து தனியார் தொழிற்சாலை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

ராணிப்பேட்டை, ஜன.9: வாலாஜா அருகே தனியார் தொழிற்சாலை ஊழியர்கள் பணியிடை நீக்கம் செய்தததை திரும்ப பெற்று மீண்டும் தொழிற்சாலை நிர்வாகம் பணியை வழங்க கோரி இந்து முன்னணி நிர்வாகிகளுடன் நேற்று ராணிப்பேட்டை சப்-கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு மனு வழங்கினர். அதில் கூறியிருப்பதாவது:வாலாஜா அடுத்த தென்கடப்பந்தாங்கல் முசிறி ரோட்டில் உள்ள பால் கவர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் கடந்த 2 வருடங்களாக ஒப்பந்த ஊழியர்களாக பணிபுரிந்து வருகிறோம்.கடந்த 1ம் தேதி ஆங்கில புதிய வருட பிறப்பு அன்று அரசு விடுமுறையின் பேரில் அனைவரும் (58 பேரும்) விடுமுறை எடுத்துக்கொண்டோம். இதையடுத்து, கடந்த 2ம் தேதி வழக்கம்போல் பணிக்கு சென்றோம். அப்போது தொழிற்சாலை நிர்வாகம் எங்களை வேலைக்கு அனுமதிக்கவில்லை.

இதுகுறித்து, நாங்கள் மனிதவள மேம்பாட்டு அதிகாரியிடம் விடுமுறை சம்பந்தமாக பேசினோம், ஆனால், அவர்கள் தொழிற்சாலை நிர்வாகியிடம் தெரிவிக்கவில்லை. மேலும், எங்களை பணிக்கு வரவேண்டாம் என நிர்வாகத்தினர் திட்டவட்டமாக கூறிவிட்டனர்.இந்நிலையில் கடந்த 4ம் தேதி அன்று இதுகுறித்து வாலாஜா காவல் துறை அதிகாரிகளின் முன்னிலையில் நாங்கள் தொழிற்சாலை நிர்வாகத்திடம் பேசினோம்.அதன் பேரில் எங்களுக்கு வேலை வழங்குவதாக தொழிற்சாலை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.பின்னர், கடந்த 7ம் தேதி தொழிற்சாலை நிர்வாகத்திடம் சென்று கேட்டபோது இதற்கான சரியான பதிலை அளிக்கவில்லை. இதனால், 58 குடும்பத்தாரின் வாழ்வாதாரம் முழுவதும் பாதிப்படைந்துள்ளது.

எனவே, சப்-கலெக்டர் இந்த பிரச்னைக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்று கொண்ட சப்-கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். இதையடுத்து, அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.இதில் இந்து முன்னணி வேலூர் கோட்ட அமைப்பாளர் ராஜேஷ், மாவட்ட செயலாளர்கள் மோகன், ஜெகன், வாலாஜா ஒன்றிய துணைத் தலைவர் சதீஷ் உடனிருந்தனர்.

× RELATED நாமக்கல்லில் 108 ஆம்புலன்ஸ் ஓட்டுநர்...