பிஎஸ்என்எல் அலுவலகம், குடியிருப்புக்கு குடிநீர் இணைப்பு துண்டிப்பு

திருப்பத்தூர், ஜன.9: திருப்பத்தூர் நகராட்சிக்கு வரி செலுத்தாத பிஎஸ்என்எல் அலுவலகம் மற்றும் குடியிருப்பு பகுதிகளுக்கு செல்லும் குடிநீர் இணைப்பை அதிகாரிகள் துண்டித்தனர்.திருப்பத்தூர் கவுதமபேட்டை அருகே மத்திய அரசின் கீழ் இயங்கும் பிஎஸ்என்எல் தொலைத்தொடர்பு அலுவலகம் மற்றும் அதில் பணிபுரியும் பணியாளர்களுக்கு குடியிருப்பு பகுதி உள்ளது.இந்த குடியிருப்பு பகுதி மற்றும் அலுவலகம் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி மற்றும் குடிநீர்வரி பல ஆண்டுகளாக செலுத்தாமல் இருந்து வந்தனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் பலமுறை நோட்டீஸ் அனுப்பியும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.

இதனால், நேற்று காலை திருப்பத்தூர் நகராட்சி ஆணையாளர் சந்திரா உத்தரவின் பேரில் வருவாய் ஆய்வாளர் தெய்வசிகாமணி, சுகாதார அலுவலர் ராஜரத்தினம் ஆகியோர் அதிரடியாக குடியிருப்பு பகுதி மற்றும் அலுவலகத்திற்கு செல்லும் குடிநீர் இணைப்பை துண்டித்தனர்.மேலும், சொத்து வரி செலுத்தாவிட்டால் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்தனர். மத்திய அரசின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்பு மையத்தினர் மாநில அரசுக்கு செலுத்த வேண்டிய வரிகளை பல ஆண்டுகளாக செலுத்தாமல் இருப்பது வேதனைக்குரிய விஷயமாக உள்ளது.

× RELATED அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட அதிகமாக...