பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் ரேஷன் கடைகளில் டிஎஸ்ஓ திடீர் ஆய்வு

ஆற்காடு, ஜன.9: ஆற்காடு தாலுகாவில் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு வழங்கும் ரேஷன் கடைகளில் மாவட்ட வழங்கல் அலுவலர் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.பொதுமக்கள் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாடும் வகையில் தமிழக அரசு சிறப்பு பரிசு தொகுப்பு வழங்க உத்தரவிட்டுள்ளது. அதை தொடர்ந்து கடந்த 7ம் தேதி முதல் பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ரேஷன் அட்டை பயனாளிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

ஆற்காடு தாலுகாவில் உள்ள 159 ரேஷன் கடைகளில் 69 ஆயிரம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, முந்திரி 20 கிராம், ஏலக்காய் 5 கிராம் 2 அடி நீளமுள்ள கரும்புத்துண்டு மற்றும் ₹1000 உள்பட பொங்கல் சிறப்பு பரிசு தொகுப்பு ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.இதனை மாவட்ட வழங்கல் அலுவலர் பேபி இந்திரா நேற்று பார்வையிட்டு அனைத்து பொருட்களும் சரியான அளவுகளில் வழங்கப்படுகிறதா என்று ஆய்வு மேற்கொண்டார். மேலும், எந்தவித சுணக்கமும் இன்றி அட்டைதாரர்களுக்கு வரும் 14ம் தேதிக்குள் முழுமையாக வழங்க வேண்டும் என்று விற்பனையாளர்களுக்கு உத்தரவிட்டார்.தொடர்ந்து, கடைகளில் உள்ள இருப்பு விவரங்கள் குறித்து கேட்டறிந்தார். இதில் வட்ட வழங்கல் அலுவலர் பழனிராஜன், வருவாய் ஆய்வாளர் மாதவன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்

× RELATED எடப்பாடி, ஓபிஎஸ் தலைமைக்கு எதிராக அதிமுக எம்எல்ஏ திடீர் போர்க்கொடி