வேலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்கள் முடங்கின ; மக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பில்லை

வேலூர், ஜன.9:தொழிற்சங்கங்கள் அறிவித்த நாடு தழுவிய வேலைநிறுத்த போராட்டத்தில் வேலூர் மாவட்டத்தில் மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்ட நிலையில், அரசு பஸ்களும், டாஸ்மாக் கடைகளும் வழக்கம்போல் இயங்கின.மத்திய அரசின் பணம் மதிப்பிழப்பு நடவடிக்கை, ஜிஎஸ்டி வரி விதிப்பு, பெட்ரோல் டீசல் விலை உயர்வு, ஆகியவற்றை கண்டித்து நாடு தழுவிய 2 நாள் ஆர்ப்பாட்டம் மற்றும் வேலைநிறுத்த போராட்டம் நேற்று தொடங்கியது.இதில், அரசு ஊழியர் சங்கத்தினர். வருவாய்த்துறை, போக்குவரத்துத்துறை, கருவூலகத்துறை, சுகாதாரத்துறை, ஊரக வளர்ச்சித்துறை அலுவலர், மின்வாரிய ஊழியர் சங்கங்கள், டாஸ்மாக் பணியாளர் சங்கங்கள், மத்திய அரசு நிறுவனங்களான தபால்துறை, பிஎஸ்என்எல் தொலைதொடர்பு, வங்கி ஊழியர், அலுவலர் சங்கங்களை சேர்ந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டுள்ளனர்.

வேலூர் கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் சார்பில் தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் சரவணராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைபடுத்த வேண்டும். மக்களுக்கு எதிரான திட்டங்களை கைவிட வேண்டும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன. டாஸ்மாக் ஊழியர் சங்கங்கள் சார்பில் ஏஐடியுசி சங்க மாநில பொருளாளர் கோவிந்தராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.வேலூர் அண்ணா கலையரங்கம் அருகே போக்குவரத்து தொழிலாளர்கள் மற்றும் மோட்டார் வாகன தொழில் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சிஐடியு அரசு போக்குவரத்துக்கழக ஊழியர் சங்க மாவட்ட தலைவர் காசிநாதன், ஏஐடியுசி ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் சிம்புதேவன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், புதிய மோட்டார் வாகன சட்டதிருத்த மசோதாவை கைவிட வேண்டும். பெட்ரோல், டீசல் விலை உயர்வை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மத்திய, மாநில அரசு மற்றும் பொதுத்துறை ஓய்வூதியர் சங்கங்களின் ஒருங்கிணைப்புகுழு சார்பில் டெலிபோன்பவன் அருகே ஒருங்கிணைப்புக்குழு மாவட்ட தலைவர் குப்பன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது.அகில இந்திய அஞ்சலக ஊழியர் சங்கங்களின் வேலூர், காட்பாடி கோட்டம் சார்பில் வேலூர் தலைமை தபால் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கமலேஷ் சந்திரா கமிட்டி பரிந்துரையை நடைமுறைபடுத்த வேண்டும், அஞ்சலக சேவையை தனியாருக்கு மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும். மத்திய, மாநில பொதுத்துறை பங்குகள் விற்பனையை நிறுத்த வேண்டும் உட்பட 35 கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த வேலைநிறுத்த போராட்டம் காரணமாக கலெக்டர் அலுவலகம், வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை, கருவூலகத்துறை, சுகாதாரத்துறை, போக்குவரத்துத்துறை, பத்திரப்பதிவுத்துறை, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி என மாவட்டம் முழுவதும் மாநில அரசு அலுவலங்கள் பணியாளர்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அதேபோல் தலைமை தபால் நிலையம் உட்பட அனைத்து அஞ்சலகங்கள், பிஎஸ்என்எல் அலுவலகங்கள், வங்கிகள் என மத்திய அரசு அலுவலகங்கள் வெறிச்சோடி காணப்பட்டன.தேநேரத்தில் அரசு பஸ்கள், தனியார் பஸ்கள், ஆட்டோக்கள் உட்பட போக்குவரத்து வாகனங்கள் வழக்கம்போல் ஓடின. டாஸ்மாக் கடைகள் வழக்கம்போல் திறந்திருந்தன. மேலும் வர்த்தக நிறுவனங்கள், அரசு, தனியார் மருத்துவமனைகள் இயங்கின. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை. ஆனால், பல்வேறு பணிகள் தொடர்பாக மத்திய, மாநில அரசு அலுவலகங்களுக்கு வந்த பொதுமக்கள் கடும் பாதிப்புக்குள்ளாகினர்.கர்நாடகா செல்லும் பஸ்கள் ஓசூரில் நிறுத்தம்

வேலூர் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப்பட்டன. ஷேர் ஆட்டோக்கள், சரக்கு லாரிகள் போக்குவரத்து வழக்கம்போல் காணப்பட்டது. வேலூரில் இருந்து கர்நாடகா சென்ற பஸ்கள் எல்லையான ஓசூரில் நிறுத்தப்பட்டன. அசம்பாவிதங்கள் ஏற்படுவதை தடுக்கும் விதமாக எஸ்பி பிரவேஷ்குமார் உத்தரவின்பேரில் டிஎஸ்பி பாலகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் வேலூர் புதிய பஸ் நிலையத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். நகரின் முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் பாதுகாப்பிற்கு நிறுத்தப்பட்டனர். சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் ரோந்து வாகனங்களில் சென்று போலீசார் கண்காணித்தனர்.

× RELATED அரசு அலுவலகங்கள், மருத்துவமனையில் சுழற்சி முறையில் ஆய்வு செய்ய வேண்டும்