திருவண்ணாமலையில் குறைதீர்வு கூட்டம்

திருவண்ணாமலை, ஜன.8: 2வது திருமணம் செய்து கொண்டதை தட்டிக்கேட்டதற்கு கொலை மிரட்டல் விடுத்த கணவன் மற்றும் அவருக்கு உடந்தையாக உள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாதிக்கப்பட்ட இளம்பெண், கலெக்டரிடம் மனு அளித்தார்.திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று, மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமையில் நடந்தது. இதில் டிஆர்ஓ ரத்தினசாமி, பயிற்சி கலெக்டர் பிரதாப், திட்ட இயக்குநர் ெஜயசுதா, சமூக பாதுகாப்பு திட்ட தனித்துறை ஆட்சியர் உமாமகேஸ்வரி உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

கூட்டத்தில், மகளிர் சுயஉதவிக்குழு கடனுதவி, முதியோர் உதவித்தொகை, திருமண திட்ட உதவித்தொகை உள்ளிட்ட 400க்கும் மேற்பட்ட கோரிக்கை மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் பெற்றுக்கொண்டு விசாரணை நடத்தினார். தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலகத்திற்கு சென்று மாற்றுத்திறனாளிகளின் கோரிக்கை மனுக்கள் மீது விசாரணை நடத்தினார்.இந்நிலையில், சேத்துப்பட்டு வஉசி தெருவை சேர்ந்த பிரியா(27) என்ற இளம்பெண், கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருந்ததாவது:

எனக்கு தாய், தந்தை யாரும் இல்லை. எனது பாட்டியின் பராமரிப்பில்தான் வசித்து வந்தேன். கடந்த 2008ம் ஆண்டு துருவம் கிராமத்தை சேர்ந்த சீனுவாசன் என்பவருடன் திருமணம் நடந்தது. எங்களுக்கு பவித்ரா என்ற பெண் குழந்தை பிறந்தது. எனது கணவர் கடந்த 2010ம் ஆண்டு நடந்த விபத்தில் இறந்துவிட்டார். எனவே, எனது பாட்டி வீட்டில் இருந்து வந்தேன். அதன்பின்னர், சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த குமரன் என்பவருடன் கடந்த 2014ம் ஆண்டு திருமணம் நடந்தது. 2016ம் ஆண்டு எங்களுக்கு ஒரு ஆண்குழந்தை பிறந்தது.இந்நிலையில், எனக்கு தெரியாமல் குமரனுக்கு அவரது பெற்றோர், உறவினர்கள் சேர்ந்து அதே கிராமத்தை சேர்ந்த மற்றொரு பெண்ணுடன் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு திருமணம் செய்து வைத்தனர். இதையறிந்து தட்டி கேட்டபோது, எனக்கும், எனது குழந்தைக்கும் கொலைமிரட்டல் விடுத்தனர். இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே, 2வது திருமணம் செய்து கொண்ட எனது கணவர் மீதும், இதற்கு உடந்தையாக இருந்தவர்கள் மீதும்உரிய நடவடிக்கை எடுத்து, எனக்கும் எனது குழந்தைக்கும் உரிய பாதுகாப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறியிருந்தார்.இதேபோல், மெய்யூர் அடுத்த மேல்கச்சிராப்பட்டு கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்களுக்கு சொந்த இடம் இல்லாததால் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். அரசு சார்பில் இலவச வீட்டுமைன பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டரிடம் மனு அளித்தனர்.

× RELATED குடிநீர் பிரச்னையால் 2 மாதமாக...