பாலியல் விழிப்புணர்வு ஏற்படுத்த வாலிபர் பைக் பயணம்

திருவண்ணாமலை, ஜன.8: பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, திருவண்ணாமலையில் இருந்து ராமேஸ்வரம் வரை பைக் பயணம் மேற்கொள்ளும் வாலிபரை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழியனுப்பி வைத்தார்.திருவண்ணாமலை மாவட்டம், படவேடு அடுத்த வீரக்கோவில் கிராமத்தை சேர்ந்தவர் ராமலிங்கம், விவசாயி. இவரது மகன் ராஜ்குமார்(28). பொறியியல் பட்டதாரியான இவர் போட்டோ ஸ்டுடியோ நடத்தி வருகிறார். இவருக்கு விமலா என்ற மனைவியும், கைக்குழந்தையும் உள்ளனர்.

இந்நிலையில், பெண்களை தெய்வமாக போற்றும் நாட்டில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் நடைபெறுவதை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக ராஜ்குமார் பைக் விழிப்புணர்வு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டார்.அதன்படி, திருவண்ணாமலையில் இருந்து ராமேஸ்வரத்தில் உள்ள ஏபிஜே அப்துல்கலாம் நினைவிடம் வரை, விழிப்புணர்வு பைக் பயணத்தை நேற்று கலெக்டர் அலுவலக வளாகத்திலிருந்து தொடங்கினார். அவரை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி வழியனுப்பி வைத்தார்.
திருவண்ணாமலையில் இருந்து ராமேஸ்வரம் சென்று, பின்னர் அங்கிருந்து வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பயணத்தை நிறைவு செய்ய உள்ளதாகவும், இப்பயணம் 10 நாட்களில் நிறைவு செய்யப்பட உள்ளதாகவும் ராஜ்குமார் தெரிவித்தார்.

× RELATED காரைக்காலில் பைக் திருடிய சகோதரர்கள் கைது