பொங்கல் பண்டிகைக்காக வெல்லம் உற்பத்தி தீவிரம் : விலை வீழ்ச்சியால் விவசாயிகள் விரக்தி

கலசபாக்கம், ஜன.8: பொங்கல் திருநாளுக்கு வெல்லம் தயாரிக்கும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ள நிலையில், கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு வெல்லம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது அவர்களை வேதனையில் ஆழ்த்தியுள்ளது.பெரிய, சிறிய தொழிற்சாலைகள் ஏதும் இல்லாததால் திருவண்ணாமலை மாவட்டத்தின் பிரதான தொழிலாக விவசாயம் உள்ளது. நெல், கரும்பு அதிகளவில் சாகுபடி செய்யப்படுகிறது. சர்க்கரை ஆலைகளுக்கு பதிவு செய்த கரும்பு விவசாயிகள், தாங்கள் விளைவித்த கரும்பை அனுப்பி வைக்கின்றனர். சர்க்கரை ஆலைகளுக்கு கரும்பை அனுப்பாத விவசாயிகள் வெல்ல உற்பத்தியில் ஈடுபட்டு வருகின்றனர்.

தற்போது பொங்கல் திருநாளுக்கு ஒருவாரமே உள்ள நிலையில் கலசபாக்கம் மற்றும் சுற்றுப்புற கிராமங்களில வெல்லம் தயாரிக்கும் பணியில் கரும்பு விவசாயிகள் ஆர்வத்துடன் ஈடுபட்டு வருகின்றனர், கடந்த ஆண்டு வெல்லம் விலை கிலோ ஒன்று ₹45 வரை விற்கப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு வெல்லத்தின் விலை வீழ்ச்சி அடைந்து கிலோ ₹37 லிருந்து ₹40 வரை மட்டுமே விற்கப்படுகிறது. வெல்லத்தின் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

சர்க்கரை ஆலையில் பதிவு செய்து கரும்பு சப்ளை செய்யும் விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் வெல்லம் தயாரிக்கும் விவசாயிகளுக்கு வங்கி கடன் இதுவரை வழங்கப்படவில்லை. வெல்லம் உற்பத்தி செய்வதற்கு கரும்பு ஆலை, கொப்பரை உள்ளிட்ட தளவாட பொருட்கள் வாங்குவதற்கும். கரும்பு ஆலை கொட்டகை அமைப்பதற்கும் குறைந்தது ₹3 லட்சம் வரை செலவாகிறது. அதேபோல் கரும்பு சாகுபடி செய்வதற்கும் அதிகளவில் பராமரிப்பு செலவுகள் உள்ளது.ஆனால் வங்கிகளில் கடன் வழங்கப்படுவதில்லை. இதனால் வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டுள்ளனர். வெல்லம் உற்பத்தியில் ஈடுபடும் விவசாயிகளுக்கு வங்கி கடன் வழங்க வேண்டும் என்று பல ஆண்டுகளாக அவர்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். ஆனால் இதுவரை அவர்களின் கோரிக்கை கண்டுக்கொள்ளப்படவில்லை.இந்நிலையில் வெல்லம் விலை வீழ்ச்சி, பொங்கல் திருநாளை இனிக்க செய்யும் வெல்லம் உற்பத்தியில் உள்ள விவசாயிகளுக்கு மட்டும் பொங்கல் திருநாள் கசப்பாகியுள்ளது. எனவே, வெல்லம் தயாரிக்கும் விவசாயிகளை ஊக்குவிக்கும் விதத்தில் வங்கிக்கடன் வழங்குவதுடன், வெல்லத்தை அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.

× RELATED திரவுபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா