பிரமாண்ட பெருமாள் சிலை சிக்கலான சாலைகளை கடந்து சென்றது : திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் தரிசனம்

திருவண்ணாமலை, ஜன.8: வந்தவாசியில் இருந்து பெங்களூருக்கு கொண்டுசெல்லப்படும், 300 டன் எடையுள்ள பிரமாண்ட பெருமாள் சிலை, திருவண்ணாமலை நகரின் சிக்கலான சாலைகளை வெற்றிகரமாக கடந்து வந்தது. அப்போது, ஏராளமான பக்தர்கள் திரண்டு தரிசனம் செய்தனர்.திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து, ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 300 டன் எடையுள்ள பெருமாள் சிலை, பெங்களூரு ஈஜிபுரா எனும் இடத்தில் பீடத்துடன் இணைத்து 108 உயரத்தில் நிறுவ திட்டமிடப்பட்டுள்ளது.

அதையொட்டி, 64 அடி உயரம், 24 அடி அகலம் கொண்ட முழுமையாக செதுக்கி முடிக்கப்படாத பிரமாண்ட பெருமாள் சிலை, 240 டயர்கள் கொண்ட ராட்சத லாரியில் கொண்டு செல்லப்படுகிறது.அதன்படி, கொரக்கோட்டை கிராமத்தில் இருந்து, கடந்த மாதம் 7ம் தேதி சிலையின் பயணம் தொடங்கியது. டயர்கள் வெடித்தல், நெருக்கடியான சாலையில் உள்ள கட்டிடங்கள் மற்றும் மரங்கள் அகற்றுதல் என பல்வேறு சவால்கள் மற்றும் போராட்டங்களை கடந்து பெருமாள் சிலையின் பயணம் தொடர்கிறது.வந்தவாசியில் இருந்து திண்டிவனம், செஞ்சி, சேத்துப்பட்டு, அவலூர்பேட்டை, மங்களம் வழியாக திருவண்ணாமலை நகரின் எல்லைக்கு கடந்த 5ம் தேதி மாலை சிலை வந்து சேர்ந்தது. புதிய ரிங்ரோடு அருகே நிறுத்தப்பட்ட சிலையை, நேற்று முன்தினம் அங்கிருந்து திருவண்ணாமலை நகருக்குள் கொண்டுவர முயன்றனர்.

ஆனால், மேடான சாலையை கடக்க முடியாமல் ராட்சத லாரி திணறியது. ஒருநாள் முழுவதும் முயன்றும் பயனில்லை. அதைத்தொடர்ந்து, சிலையை சுமந்து வரும் லாரியை இழுத்துச்செல்ல கூடுதலாக ஒரு வால்வோ வாகனம் வரவழைக்கப்பட்டது.அதைத்தொடர்ந்து, 3 வால்வோ வாகனங்களின் உதவியுடன் நேற்று சவாலான ரிங்ரோடு பகுதியை ராட்சத லாரி கடந்தது. பின்னர், திண்டிவனம் சாலை வழியாக திருவண்ணாமலை ரயில்வே கேட்டை கடந்து பெரியார் சிலை சந்திப்பு, மத்தலாங்குளத் தெரு வழியாக திருவண்ணாமலை நகருக்குள் வந்தது.ரயில்வே கேட், பெரியார் சிலை சந்திப்பு, பஸ் நிலையம் அருகே உள்ள ரவுண்டானா சந்திப்பு ஆகிய குறுகலான பகுதிகளை கடப்பதில் சவால் இருந்தது. ஆனாலும், வால்வோ வாகனங்களை இயக்குவோர், மிக சாதுர்யமாக, கட்டிடங்களுக்கு எந்தவித பாதிப்பும் இல்லாமல் மெல்ல மெல்ல வாகனத்தை இயக்கினர்.

ரவுண்டானா சந்திப்பு அருகே லாரியை திருப்புவதில் சிக்கல் ஏற்பட்டது. எனவே, சாலையின் நடுவே இருந்த சென்டர் மீடியன் இடித்து அகற்றப்பட்டது. அதன்பிறகு, பஸ் நிலையம் வழியாக கடந்து, அண்ணா நுழைவு வாயில் பகுதியை பெருமாள் சிலை அடைந்தது.திருவண்ணாமலை நகருக்குள் வந்த பிரமாண்ட பெருமாள் சிலையை, ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து தரிசனம் செய்தனர். அதனால், நகரம் திடீர் விழாக்கோலமாக காட்சியளித்தது. சிக்கலான சாலைகளை கடந்துள்ள நிலையில் திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் இருந்து, இன்று காலை செங்கம் நோக்கி பெருமாள் சிலையின் பயணம் தொடர திட்டமிடப்பட்டுள்ளது.

× RELATED வாழ்வில் விரும்பியவற்றை பெற வைகாசி வளர்பிறை ஏகாதசி திதி பெருமாள் வழிபாடு