போளூர் பகுதியில்மின்கட்டணம் குறித்த எஸ்எம்எஸ் கிடைப்பதில் தொடரும் குளறுபடி சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

போளூர், ஜன.4: போளூர் பகுதியில் மின் கட்டணம் குறித்த எஸ்எம்எஸ் கிடைப்பதில் குளறுபடி ஏற்படுகிறது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக மின்வாரியம் மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகமாக மாறிய பின்னர், மின்கட்டணம் கட்டுவதில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்து தபால் நிலையங்கள், வங்கிகள் மற்றும் ஆன்லைன் மூலம் மின்கட்டணம் செலுத்தலாம் என்ற அறிவிப்பு வரவேற்பை பெற்றாலும், குழுப்பமான சூழ்நிலையே உள்ளது.இந்நிலையில், போளூர் உள்பட பல பகுதிகளில் இதுவரை மின்கட்டணம் குறித்த எஸ்எம்எஸ் எதுவும் வரவில்லை. சிலர் மின் கட்டணம் செலுத்தும் மையத்தில் ேகட்டும் சரியான தகவல் இல்லை. இதில் பெரும்பாலானோர் எஸ்எம்எஸ் வரும் என்று காத்திருந்து அபராதத்துடன் மின் கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.இதேபோல், தபால் நிலையம் மற்றும் ஆன்லைனில் மின்கட்டணத்தை கட்டினாலும், சில நேரங்களில் இணையதள தொழில் நுட்ப குளறுபடி காரணமாக குறிப்பிட்ட நாட்களில் மின்வாரிய கணக்கில் பணம் வரவு வைக்கப்படாமல், சில நாட்கள் காலதமாதமாக வரவு வைக்கப்படுகிறது.

இதனால், மின்கட்டணம் செலுத்த கடைசி நாள் முடிந்தது எனக்கூறி மின்வாரிய ஊழியர்கள் பியூசை எடுக்கும்போது தான் மின் கட்டணம் செலுத்தாதது தெரியவருகிறது. இதனால், அபராத கட்டணம், மறு இணைப்பு கட்டணம் என ₹100க்கும் அதிமாக தர வேண்டியுள்ளது.ஏற்கனவே, அதிகமாக உயர்ந்துள்ள மின் கட்டணத்தால் அவதிப்பட்டு வரும் நடுத்தர மக்கள் இதுபோன்ற குளறுபடிகளால் மிகவும் அவதியடைந்து வருகின்றனர்.மேலும், தபால் நிலையத்தில் மின்கட்டணம் கட்டியிருந்து அது மின்வாரிய அலுவலக கணக்கில் வரவு ஆகாவிட்டாலும் உரிய தேதியில் பணம் செலுத்தியதற்கான ரசீது காட்டினால் அபராதம் வசூலிக்க கூடாது.ஆனால், சில பகுதிகளில் கடைசி நாளுக்கு முன்பே தபால் நிலையத்தில் பணம் கட்டியதற்கான ரசீதை காட்டிய பின்னரும் ஊழியர்கள் பிடிவாதமாக பியூசை எடுத்துச் சென்று அபராத பணம் வசூலிக்கும் சூழ்நிலை உள்ளது.எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து எஸ்எம்எஸ் குளறுபடிகளை உடனே சரிசெய்ய வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

× RELATED சேதமடைந்த நீர்த்தேக்க தொட்டியை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை