கட்டிட தொழிலாளர்களுக்கு ஒதுக்கிய வீட்டு மனை பட்டா வழங்க வேண்டும் கலெக்டரிடம் மனு

திருச்சி, டிச.19:  திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் ராஜாமணி பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக்கொண்டார்.

தமிழ்நாடு ஏஐடியூசி கட்டடத் தொழிலாளர்கள் சங்கம் செயலாளர் சண்முகம் தலைமையில் திரண்ட உறுப்பினர்கள் திருச்சி கலெக்டர் ராஜாமணியிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: ரங்கம் தொகுதிக்குட்பட்ட சோமரசம்பேட்டை, நாச்சிக்குறிச்சி, அதவத்தூர், அல்லித்துறை பகுதிக்குட்பட்ட ஏழை, எளிய 251 கட்டுமான தொழிலாளர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்கக்கோரி பல கட்ட போராட்டம் நடைபெற்றது. 2014ல் ரங்கம் தாசில்தார் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில், கோரிக்கை நிறைவேற்றப்படும் என உறுதியளித்து ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டது. இதுதொடர்பாக சட்டமன்றத்திலும் பேசப்பட்டுள்ளது. அதன்படி 251 பேருக்கு ஒதுக்கி, தயாரான இடத்தில் பரிந்துரைக்கப்பட்ட இடத்தை வழங்க வேண்டும். தமிழக மக்கள் முன்னேற்றக் கழக மாநில துணைப் பொதுச்செயலாளர் இமான்சேகர், வடக்கு மாவட்ட செயலாளர் வைரி மனோகர் ஆகியோர் அளித்த மனுவில், ‘பட்டியல் இனத்தில் உள்ள 7 இனங்களை தேவேந்திரகுல வேளாளர் என குறிப்பிட வேண்டும். அவர்களை பட்டியல் இனத்திலிருந்து நீக்கி இதரப் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளனர்.

அந்தநல்லூர், கடியாக்குறிச்சி உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த சேர்ந்த 30க்கும் மேற்பட்ட பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:

அந்தநல்லூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதுநிலை உதவி மருத்துவராக பணிபுரிந்த ராஜ்மோகன் பணி நேரத்திலும், பணி இல்லாத நேரத்திலும் மக்களுக்கு சிறப்பாக மருத்துவ பணியாற்றி வந்தார். இந்நிலையில் மருத்துவரை பணியிட மாற்றம் செய்துள்ளனர். இதனை ரத்து செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறியுள்ளனர். திருச்சி ரயில்வே ஜங்ஷன் ஆட்டோ ஸ்டாண்டில் சிலர்  கந்து வட்டி நடத்தி வருவதாகவும், இதுகுறித்து  நடவடிக்கை எடுக்கக்கோரியும் 30க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Related Stories: