ஆன்லைன் மயமாகும் விதை ஆய்வு பிரிவு அதிகாரி தகவல்

திருச்சி, டிச.19:   விதை விற்பனை நிலைய ஆய்வு, விதை மாதிரி  எடுத்தல், விற்பனைத் தடை விதித்தல் என அனைத்து நடைமுறைகளும் இனிவரும்  காலங்களில் ஆன்லைன் மூலமே நடக்கும் என விதை ஆய்வு துணை இயக்குனர் தெரிவித்துள்ளார். விவசாயிகளுக்கு தரமான விதைகள் கிடைப்பதை உறுதி செய்யும் வகையில் விதை மற்றும் அங்ககசான்றளிப்புத் துறையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்படுகிறது. இந்நிலையில், ஸ்பெக்ஸ் எனும் மென்பொருள் மூலம் விதைச் சான்றளிப்பு மற்றும் விதை ஆய்வு நடைமுறைகள் ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விதை சான்றளிப்பு ஆன்லைன் மயமாக்கப்பட்டுள்ளது. தற்போது விதை ஆய்வு நடைமுறையும் ஆன்லைன் மயமாக்கப்படுகிறது.

இத்திட்டத்தின் மூலம் அரசு மற்றும் தனியார் விதை இருப்பு ரக வாரியாக துல்லியமாக அனைவரும் தெரிந்துகொள்ளலாம். புதியதாக விதை விற்பனை உரிமம் பெறுதல், விற்பனை உரிமங்கள் புதுப்பித்தல், முகவரி மாற்றம், கூடுதல் கிடங்கு சேர்க்கை போன்ற அனைத்து செயல்களும் இனிவரும் காலங்களில் ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். இதற்கென தனியாக ஒவ்வொரு விண்ணப்பதாரருக்கும் தனி அடையாள எண் உருவாக்கப்படும். இதுகுறித்து திருச்சி விதை ஆய்வு துணை இயக்குனர் கண்ணன் கூறுகையில், ‘விதை விற்பனை நிலைய ஆய்வு, விதை மாதிரி எடுத்தல், விற்பனைத் தடை விதித்தல் என அனைத்து நடைமுறைகளும் இனிவரும் காலங்களில் ஆன்லைன் மூலமே நடக்கும். இதன் மூலம் வெளிப்படைத் தன்மை பாதுகாக்கப்படுவதோடு, விவசாயிகள் அனைவரும் பயன்பெறுவர்’ என்றார்.

Related Stories: