தொட்டியம் அருகே தரமான அரிசி, பருப்பு வழங்க கேட்டு ரேஷன் கடையை மக்கள் முற்றுகை

தொட்டியம், டிச.19:   தொட்டியம்  தாலுகா அலகரை கிராமத்தில் ரேஷன் கடையில் தரமான அரிசி, பருப்பு வழங்காததை  கண்டித்து கடையை முற்றுகையிட்டு பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு  ஏற்பட்டது. தொட்டியம் அருகே உள்ள அலகரை கிராமத்தில் பொதுமக்கள்  பயன்பெறும் வகையில் ரேஷன் கடை அமைந்துள்ளது. நேற்று இக்கடையில் வழங்கப்பட்ட  அரிசி மற்றும் பருப்பு தரமானதாக இல்லையென கூறப்படுகிறது.

இதனால்  ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் உணவுக்காக வழங்கப்படும் அரிசி மற்றும்  பருப்பு உள்ளிட்ட உணவு பொருட்களை தரமாக வழங்க வேண்டும் என கேட்டு சுமார்  30க்கும் மேற்பட்டோர் ரேஷன் கடையை முற்றுகையிட்டு விற்பனையாளரிடம்  வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். மேலும் போதிய அளவு குடும்ப அட்டைதாரர்களுக்கு  மண்ணெண்ணெய் வழங்க வேண்டும் என வலியுறுத்தினர். இதனால் அங்கு பரபரப்பு  ஏற்பட்டது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வட்ட வழங்கல் அலுவலர்கள் தரமான  அரிசி, பருப்பு வழங்கிட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியதையடுத்து  பொதுமக்கள் கலைந்துசென்றனர்.

Related Stories: