கோமாரி நோய் பாதிப்பு எதிரொலி மணப்பாறை மாட்டு சந்தை ‘வெறிச்’

மணப்பாறை, டிச.19:  கோமாரி நோய் பாதிப்பு எதிரொலியாக மணப்பாறை மாட்டு சந்தை செயல்படாததால் வெறிச்சோடி காணப்பட்டது. தமிழகத்திலேயே திருச்சி மாவட்டம், மணப்பாறையில் புகழ் பெற்ற மாட்டு சந்தை உள்ளது. இந்த சந்தை ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை நடைபெறும். இந்த சந்தையில் தமிழகம் மட்டுமின்றி ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் விவசாயிகள், வியாபாரிகள் வந்து மாடுகளை வாங்கி செல்வார்கள். கறவை மாடுகள், உழவு மாடுகள், நாட்டுப் பசுக்கள் என ஆயிரக்கணக்கான மாடுகள் விற்பனைக்கு வரும். இது மட்டுமின்றி செவ்வாய் மாலை தொடங்கி புதன்கிழமை மதியம் வரை சுமார் 3 முதல் 5 கோடி ரூபாய் வரை விற்பனை நடைபெறும்.

இந்நிலையில் கோமாரி நோய் தாக்கம் காரணமாக மாட்டு சந்தை நேற்று செயல்படவில்லை. இதனால், சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. கடந்த சில நாட்களாக மாடுகளுக்கு கோமாரி நோய் தாக்கம் ஏற்பட்டு, நோய் வாய்ப்படுகின்றன. கால்நடைகளுக்கு உடல் நல குறைபாடு ஏற்படுவதால், நான்கு வாரங்களுக்கு மாவட்டத்தில் மாட்டுச்சந்தை நடத்த மாவட்ட நிர்வாகம் தடைவிதித்தது. மாடுகளை விற்பனைக்காக கொண்டு செல்லவோ, புதிதாக வாங்கவோ, விற்கவோ, வேண்டாம் என கால்நடைத்துறை அறிவுரை வழங்கியது. இதனால், வழக்கமாக மணப்பாறையில் கூடும் மாட்டுச்சந்தை நேற்று கூடவில்லை. இதனால், கால்நடை சந்தை மைதானமே வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories: