நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச இசைக்கருவிகள் விண்ணப்பிக்க அழைப்பு

தஞ்சை, டிச. 19: இலவச இசைக்கருவிகள், ஆடை ஆபரணங்கள் பெறுவதற்கு நாட்டுப்புற கலைஞர்கள்  விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டுப்புற கலைகளின் பல்வேறு கலை வடிவங்களை அழியாமல் பாதுகாக்கவும் அக்கலைகளில் ஈடுபட்டுள்ள கலைஞர்களை ஊக்குவிக்கவும், அக்கலைஞர்களின் சமூக பாதுகாப்புக்காகவும், அவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நோக்கத்துக்காகவும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியம் உருவாக்கப்பட்டது. கிராமிய கலைஞர்கள் பல்வேறு கலைநிகழ்ச்சிகளில் பங்குபெறும்போது தரமான ஆடை அணிகலன்களை அணிவதன் மூலம் கலைகளை மக்களிடையே கொண்டு செல்ல ஏதுவாக அமையும். அவர்களின் ஆடை அணிகலன்களே குறிப்பிட்ட கிராமிய கலையை எடுத்துரைப்பதாக அமையும். நாட்டுப்புற கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் அவ்வப்போது பழுதடைவதாகவும் அவர்கள் வறுமை நிலையில் உள்ளதால் புதிதாக இசைக்கருவிகள் வாங்குவதற்கு சிரமப்படுவதாகவும் தமிழ்நாடு நாட்டுப்புற கலைஞர்கள் நல வாரியம் மூலம் பதிவு செய்துள்ள நாட்டுப்புற கலைஞர்களின் ஒரு மாவட்டத்துக்கு 10 நலிவுற்ற கலைஞர்கள் தேர்வு செய்யப்பட்டு இலவச இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வாங்கி வழங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிதி ஒதுக்கீட்டுக்கேற்ப தஞ்சை மாவட்டத்தில் உள்ள நாட்டுப்புற கலைஞர்கள் முறையாக பதிவு செய்து தொடர்ந்து புதுப்பித்து கொண்டு வரும் நாட்டுப்புற கலைஞர்களுக்கு இலவச இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வேண்டி விண்ணப்பங்கள் பெறப்பட்டு 10 கலைஞர்களுக்கு இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் வழங்கப்படவுள்ளது. இந்நிலையில் இலவச இசைக்கருவிகள் மற்றும் ஆடை ஆபரணங்கள் கோரும் நாட்டுப்புற கலைஞர்கள், பதிவு பெற்ற நாட்டுப்புற கலைஞர்களின் நலவாரிய உறுப்பினர் அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் மற்றும் கோரிக்கை விண்ணப்பத்துடன் வரும் 30ம் தேதிக்குள் மண்டல உதவி இயக்குனர், மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட ஆட்சியரக அருங்காட்சியக வளாகம், நீதிமன்ற சாலை, தஞ்சாவூர் 613001 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம். இவ்வாறு கலெக்டர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்.

Related Stories: