கஜா புயலால் பாதித்த அனைவருக்கும் நிவாரணம் வழங்காத அரசை கண்டித்து 100 இடங்களில் உண்ணாவிரத போராட்டம் திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்பு

தஞ்சை, டிச. 19: கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டித்து தஞ்சை மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. இதில் 3 திமுக எம்எல்ஏக்கள் பங்கேற்றனர். கஜா புயலால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் நிவாரணம் வழங்காத தமிழக அரசை கண்டிப்பது, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களை தேசிய பேரிடர் பாதிப்பாக அறிவிக்க வேண்டும். தமிழக அரசு கோரிய நிவாரணத்தொகை ரூ.15 ஆயிரம் கோடியை உடனே மத்திய அரசு வழங்க வேண்டும். தஞ்சை மாவட்டத்தில் 1 லட்சம் வீடுகள் கட்டும் திட்டத்தை குடிமனை பட்டா வழங்கி செயல்படுத்த வேண்டும். நிவாரணம் கேட்டு போராட்டம் நடத்தியவர்கள் மீது பழிவாங்கும் நோக்கோடு போடப்பட்ட வழக்குகளை திரும்ப பெற வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சை மாவட்டத்தில் 100 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. போராட்டத்தில் திமுக, தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகள் சார்பில் ஏராளமானோர் பங்கேற்றனர். தஞ்சை பனகல் கட்டிடம் முன் நடந்த உண்ணாவிரத போராட்டத்துக்கு மாநிலக்குழு உறுப்பினர் திருஞானம் தலைமை வகித்தார். தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், திருவையாறு எம்எல்ஏவுமான துரைசந்திரசேகரன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட பொருளாளர் பாலசுப்பிரமணியன், நகர செயலாளர் கிருஷ்ணமூர்த்தி பங்கேற்றனர். கும்பகோணத்தில் நடந்த போராட்டத்தை எம்எல்ஏ அன்பழகன் துவக்கி வைத்தார். காங்கிரஸ் மாவட்ட தலைவர் லோகநாதன் முடித்து வைத்தார்.

பட்டுக்கோட்டை, மதுக்கூர் ஒன்றியங்களில் 6 இடங்களில் இந்திய கம்யூனிஸ்ட்  கட்சி சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது. பட்டுக்கோட்டை காந்தி சிலை அருகில் நடந்த போராட்டத்துக்கு சிபிஐ மாநிலக்குழு உறுப்பினர் பக்கிரிசாமி, நகர செயலாளர்  சுதாகர் தலைமை வகித்தனர். மதுக்கூர் பேருந்து நிலையத்தில் ஒன்றிய செயலாளர்  பாரதிமோகன் தலைமை வகித்தார். போராட்டத்தை மாவட்ட துணை செயலாளர்  கல்யாணசுந்தரம் துவக்கி வைத்தார். திமுக ஒன்றிய செயலாளர் இளங்கோ முடித்து  வைத்தார். கரம்பயத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் கலியபெருமாள் தலைமையில்  ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், போராட்டத்தை துவக்கி வைத்தார்.  வெண்டாகோட்டையில் ஒன்றிய நிர்வாகக்குழு உறுப்பினர் ஜான்போஸ் தலைமையில்  ஒன்றிய செயலாளர் மார்க்ஸ், போராட்டத்தை துவக்கி வைத்தார்.  பழஞ்சூரில் ஒன்றிய விவசாய சங்க தலைவர் வீரப்பன் தலைமையில் போராட்டத்தை மாவட்டக்குழு உறுப்பினர் தனசீலி துவக்கி வைத்தார்.  அதிராம்பட்டினத்தில் ஒன்றிய துணை செயலாளர் காளிதாஸ் தலைமையில்  போராட்டத்தை  மாவட்ட நிர்வாகக்குழு உறுப்பினர் நாதன் துவக்கி வைத்தார். திருவிடைமருதூரில் நடந்த போராட்டத்தை எம்எல்ஏ கோவி.செழியன் துவக்கி வைத்தார். திருப்பனந்தாளில் இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் பாரதி, பாப்பாநாட்டில் தமிழ்நாடு விவசாயிகள் சங்க பொது செயலாளர் துரைமாணிக்கம், பேராவூரணியில் விவசாய தொழிற்சங்கத்தை சேர்ந்த ராஜமாணிக்கம், திருவையாறு தேரடியில் சிபிஐ ஒன்றிய செயலாளர் தங்க.சக்கரவர்த்தி தலைமையில் நடந்தது. இதேபோல் மாவட்டம் முழுவதும் 100 இடங்களில் போராட்டம் நடந்தது.

Related Stories: