சேதுபாவாசத்திரத்தில் பாதியில் நிற்கும் பணிகள் சொந்த ஊருக்கு புறப்படும் வெளிமாவட்ட மின் ஊழியர்கள் எப்போது மின்சாரம் கிடைக்கும்: காத்திருக்கும் பொதுமக்கள்

சேதுபாவாசத்திரம், டிச. 19: சேதுபாவாசத்திரம் பகுதியில் பணிகள் நிறைவடையாத நிலையில் வெளிமாவட்ட மின்ஊழியர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்பி செல்கின்றனர். எனவே எப்போது மின்சாரம் கிடைக்கும் என்று பொதுமக்கள் காத்திருக்கின்றனர். கஜா புயலின் கோரதாண்டவத்தால் தஞ்சை மாவட்டம் சேதுபாவாசத்திரம் பகுதியில் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மின்கம்பங்கள், 100க்கும் மேற்பட்ட டிரான்ஸ்பார்மர் சேதமடைந்தது. இதையடுத்து கடந்த ஒரு மாதமாக வெளி மாவட்டங்களை சேர்ந்த மின் ஊழியர்கள் இரவு பகலாக சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். புயல் கரையை கடந்து 33 நாட்களாக வேலை பார்த்தும் இதுவரை 50 சதவீதம் வரை மட்டுமே மின் வினியோகம் வழங்கப்பட்டுள்ளது. இன்னும் பல்வேறு கிராமங்களில் வேலை 10 சதவீதம் கூட நிறைவடையவில்லை.

இதனால் ஒரு மாதமாக மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் பொதுமக்கள் வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அரைகுறையாக வேலை முடிந்த நிலையில் வெளிமாவட்ட மின் ஊழியர்கள் தங்களது ஊர்களுக்கு திரும்ப துவங்கியுள்ளனர். வேலை முடிந்துவிட்டதாக கூறி அரசு ஒப்பந்த பணியாளர்களை திருப்பி அனுப்புவதாக கூறப்படுகிறது. இதனால் மின்சாரம் கிடைக்க இன்னும் ஒரு மாதத்துக்கு மேலாகுமோ என்ற அச்சம் பொதுமக்களிடையே ஏற்பட்டுள்ளது. அரைகுறையாக செய்துள்ள வேலையை முடிக்க இங்குள்ள மின்வாரிய அலுவலகங்களில் போதுமான பணியாட்கள் கிடையாது. எனவே ஒப்பந்த பணியாளர்களை வைத்தே விரைவில் வேலையை முடித்து மின் வினியோகம் வழங்க வேண்டுமென மாவட்ட நிர்வாகத்துக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: