நெற்பயிர்களை தாக்கும் குருத்துப்பூச்சி, குலைநோய் கட்டுப்படுத்தும் வழிமுறை விவசாயிகளுக்கு ஆலோசனை

திருக்காட்டுப்பள்ளி, டிச.19: பூதலூர் வேளாண்மை உதவி இயக்குனர் சோழராஜன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: நெற்பயிரை தாக்கி சேதம் மற்றும் மகசூல் இழப்பை ஏற்படுத்தும் பூச்சிகள் மற்றும் நோய்களால் இந்தியாவில் ஆண்டுக்கு ரூ.1,102 கோடி இழப்பு ஏற்படுகிறது என மதிப்பிட்டுள்ளது. பூதலூர் வட்டாரத்தில் 10,460 ஹெக்டர் பரப்பளவில் சம்பா, தாளடி நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நெற்பயிரில் பரவலாக குருத்துபூச்சி, இலைமடக்குப்புழு, குலைநோய் தாக்குதல் கண்டறியப்பட்டுள்ளது. நெற்பயிர்களை அதிகமாக தாக்கும் பூச்சிகளில் முக்கியமானது குருத்துப்பூச்சி அல்லது தண்டுதுளைப்பான், இலை சுருட்டுப்புழு ஆகும். குருத்துப்பூச்சி எல்லா காலங்களிலும் தண்டு பகுதியை தாக்கும். இவை நெல் ரகங்களை மட்டும் தான் சேதப்படுத்தும்.

இவற்றை கட்டுப்படுத்த தழைச்சத்தை பிரித்து இடலாம். விளக்குப்பொறி, இனக்கவர்ச்சி பொறி (ஏக்கருக்கு 5 பொறிகள்) அமைத்தல். முட்டை ஒட்டுண்ணியான டிரைக்கோகிரம்மா ஜப்பானிக்கம், ஒரு ஏக்கருக்கு 2 சிசி என்ற அளவில் 10-15 நாட்கள் இடைவெளியில் 3-4 முறைகள் தேவைக்கேற்ப  பயன்படுத்தலாம். 3 சதவீத வேப்ப எண்ணெயை (ஏக்கருக்கு 4-6 லிட்டர் வேப்ப எண்ணெயை 200 லிட்டர் தண்ணீர்) மற்றும் 5 சதவீத வேப்பங்கொட்டை கரைசலை தெளித்து கட்டுப்படுத்தலாம். இலை சுருட்டு புழுவானது நடவு பயிர் முதல் பூக்கும்  பருவம் வரை தாக்கி இலைகள் சுருட்டப்பட்டு அல்லது இலைகள் மடக்கப்பட்டு பாதிப்பை ஏற்படுத்தும். இப்புழு மற்றும் தாய் அந்துப்பூச்சியை கட்டுப்படுத்த பறவைகள்  இருக்கை அமைக்கலாம். நெற்பயிரை தாக்கும் நோய்கள் பூஞ்சானம், பாக்டீரியா வைரஸ், நூற்புழு மற்றும் நுண்ணூட்டச்சத்து பற்றாக்குறையால் ஏற்படுகிறது. இவைகளின் முக்கியமான நோய் குலை நோயாகும். இலை பரப்பின் மீது நீண்ட கண்வடிவ புள்ளிகள் மற்றும் ஓரங்களில் கரும்பழுப்பு நிறம் கொண்டது. நடுவில் சாம்பல் நிறமுடையவை  பல புள்ளிகளை சேர்ந்து இலைகள் மடிந்து தீய்ந்தது போல் காணப்படும். இந்நோயை கட்டுப்படுத்த புற்கள் மற்றும் களைகளை அகற்ற வேண்டும். ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட், டெட்ராசைக்ளின் 300 கிராம், காப்பர் ஆக்ஸிகுளோரைடு 1.25 கிலோ சேர்த்து ஒரு ஹெக்டருக்கு தெளிக்கலாம். தேவைப்பட்டால் 15 நாட்கள் இடைவெளியில் மறு தெளிப்பு தெளித்து இந்நோயை கட்டுப்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: