கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடன்களை தள்ளுபடி செய்யகோரி விவசாயிகள் மறியல் போராட்டம் 15 பேர் கைது

தஞ்சை, டிச. 19: கஜா புயலால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளில் கடன்களை தள்ளுபடி செய்யக்கோரி  தஞ்சை- பட்டுக்கோட்டை சாலையில் நேற்று விவசாயிகள் சாலை மறியல் போராட்டம்  நடத்தினர். போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேர் கைது செய்யப்பட்டனர். கஜா  புயலின் கோரதாண்டவத்தால் காவிரி டெல்டா மாவட்டங்கள் பெரியளவில்  பாதிக்கப்பட்டது. புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும். தாளடி பயிர்களை காப்பாற்ற உடனடியாக மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை- பட்டுக்கோட்டை  சாலையில் தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டு இயக்கம் சார்பில்  சாலை மறியல் போராட்டம் நேற்று நடந்தது. துணைத்தலைவர் சுகுமாறன் தலைமை  வகித்தார். மாவட்ட செயலாளர் சக்திவேல், ஒன்றிய தலைவர் கண்ணன் முன்னிலை  வகித்தனர். போராட்டத்தில் கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அனைத்து  விவசாய கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும். பாதிக்கப்பட்ட தென்னை மரம்  ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். மின்சாரம் உடனடியாக வழங்க வேண்டுமென  வலியுறுத்தப்பட்டது. சாலை மறியல் போராட்டத்தில் 100க்கும் மேற்பட்ட  விவசாயிகள் கலந்து கொண்டனர். தஞ்சை தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு  சென்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 15 விவசாயிகளை கைது செய்தனர்.

Related Stories: