21 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் தஞ்சையில் 2வது நாளாக ஆர்ப்பாட்டம்

தஞ்சை, டிச. 19:  விஏஓ பணியிடங்களை மறுசீரமைப்பு செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தஞ்சையில் நேற்று 2வது நாளாக தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. கிராம நிர்வாக அலுவலர்களுக்கு மாவட்ட மாறுதலை ஒரே அரசாணையின் மூலம் வழங்க வேண்டும். விஏஓ பணியிடங்களை மறுசீரமைப்பு செய்து அதிக பணியிடங்களை அறிவிக்க வேண்டும். விஏஓ அலுவலகங்களில் அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் செய்து வரும் கணினிவழி சான்றுகள் மற்றும் இணையதள பணிகளுக்கு செலவினத்தொகை மற்றும் வசதிகள் ஆகியவற்றை தமிழக அரசு வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் அடிப்படை கல்வி தகுதியை பட்டப்படிப்பாக உயர்த்த வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் பதவியை மீண்டும் டெக்னிக்போஸ்ட் என்று மாற்றம் செய்ய வேண்டும். கூடுதல் பொறுப்பு வகிக்கும் கிராமங்களுக்கு பொறுப்பு வகிக்கும் காலம் முழுவதும் ஊதியம் வழங்க வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்கள் பணிபுரியும் கிராமத்திலேயே தங்க வேண்டும் என்ற உத்தரவை மாற்றி அமைக்க வேண்டும்.

கிராம நிர்வாகத்துறை என்ற புதிய துறையை தனியாக ஏற்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட 21 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் கடந்த 10ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடந்து வருகிறது. இந்த கோரிக்கையை வலியுறுத்தி கடந்த 14ம் தேதி முதல்கட்டமாக தஞ்சை தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதன்பின்னர் இரண்டாவது கட்டமாக நேற்று முன்தினம் தஞ்சை ஆர்டிஓ அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தொடர்ந்து இரண்டாவது நாளாக நேற்று தஞ்சை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் செல்லதுரை தலைமை வகித்தார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் முருகேசன் துவக்கி வைத்தார். துணைத்தலைவர் விஜயபாஸ்கர், பொருளாளர் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: