புயல் நிவாரணம் வந்துசேரவில்லை

காரைக்கால், டிச. 18:   காரைக்கால் மாவட்ட மக்களுக்கு, புதுச்சேரி அரசு வழங்கிய கஜா புயல் நிவாரணம், வங்கி கணக்கில் இதுவரை செலுத்தப்படவில்லை. எனவே விரைந்து வழங்குமாறு பொதுமக்கள் குறைதீர்வு கூட்டத்தில் மக்கள் வலியுறுத்தியுள்ளனர். டிசம்பர் மாதத்துக்கான 2ம் கட்ட பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நேற்று  காரைக்கால் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.கூட்டத்தில், இதுவரை வந்துள்ள புதுவைக்குரல் இணையதள புகார்கள் மீது அரசுத்துறைகள் எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் கேசவன்  அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். பின்னர், பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெற்றுக்கொண்டார். அப்போது பேசிய மக்கள், அரசின் எல்.ஜி.ஆர் பட்டா கடந்த பல மாதங்களாக வழங்கப்படாமல் இருக்கிறது. ஒரே வீட்டில் பலர் வசிப்பதால், பலவித இன்னல்களை சந்திக்க நேரிடுகிறது. எனவே, எல்.ஜி.ஆர் பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். காரைக்கால் மாவட்ட மக்களுக்கு, அரசு வழங்கிய கஜா புயல் நிவாரணம், பொதுமக்கள் வங்கி கணக்கில் இதுவரை வந்து சேரவில்லை.சேத்தூர், பண்டாரவடை உள்ளிட்ட பல பகுதிகளில் சாலைகள் படுமோசமாகிவிட்டது, அவற்றை சீரமைத்து தரவேண்டும்.கோட்டுச்சேரி திருவேட்டக்குடி, நெடுங்காடு கிராமங்களில் பாசனத்துக்கான காவிரி நீர் துளிக்கூட வரவில்லை.

காவிரி நீர் கிடைக்க வழிவகை செய்யவேண்டும். கஜா புயலுக்கு பின் தெருவிளக்குகள் அதிகமாக எரியவில்லை. அவற்றை உடனே சரிசெய்யவேண்டும் என வலியுறுத்தினர். தொடர்ந்து கலெக்டர் கேசவன் பேசுகையில், இந்த கூட்டத்தில் வழங்கப்பட்டுள்ள 35 புகார்கள் மீது சம்பந்தப்பட்ட அரசுத்துறையினர் 30 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  இணையதளம் மூலமாக வரும் புகார்கள் மீதும் உறுதியான உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். என்றார். கூட்டத்தில், சார்பு ஆட்சியர் விக்ராந்த்ராஜா  உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: