பிரான்ஸ் பல்கலையுடன் புதுவை பல்கலை புரிந்துணர்வு ஒப்பந்தம்

புதுச்சேரி, டிச. 18:   புதுவை பல்கலைக்கழகம், பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் இஸ்ட் கிரீட்யீல் பல்கலைக்கழகத்தோடு இணைந்து புதிய ஆராய்ச்சிகளில் ஈடுபடுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் நிகழ்ச்சி நடந்தது. பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் முன்னிலையில் பதிவாளர் சசி காந்த தாஸ் மற்றும் பாரீஸ் இஸ்ட் கிரீட்யீல் பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு வெளிவிவகாரங்கள் துறை துணைத்தலைவர் லாரண்டு தேவநேட் ஆகியோர் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறி

கொண்டனர். பின்னர் துணைவேந்தர் குர்மீத் சிங் பேசுகையில், பிரான்ஸ் நாட்டு பல்கலைக்கழகத்தோடு புதுவை பல்கலைக்கழகம் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் பல்வேறு பன்னாட்டு அளவிலான புதிய ஆய்வுகளும், தரமான மாணவர்களும் உருவாக வாய்ப்புள்ளது. இதன் மூலம் பல்வேறு புதிய பாடத்திட்டங்கள் உருவாக்கப்படும். கலாச்சார மேம்பாட்டுத்திட்டம் மூலம் புதுவை பல்கலைக்கழக மாணவர்கள் பிரான்ஸ் நாட்டுப் பல்கலைக்கழகங்களில் உயர் கல்வியை தொடர முடியும் என்றார்.

இந்நிகழ்ச்சியில் புதுவை பல்கலைக்கழக ஆராய்ச்சி மற்றும் கல்வியியல் துறை இயக்குநர் பாலகிருஷ்ணன், கலாச்சாரத்துறை இயக்குநர் ராஜீவ் ஜெயின், மேலாண்மைத்துறை புலமுதன்மையர் ஆஞ்சநேய சாமி, துறைத்தலைவர் சித்ரா சுப்ரமணியன், நிதிஅதிகாரி பிரகாஷ், பேராசிரியர் விக்டர் ஆனந்து, மக்கள் தொடர்பு அதிகாரி மகேஷ், இஸ்ட் கிரீட்யீல் பல்கலையின் பன்னாட்டு விவகாரங்கள் துறை இயக்குநர் ஜோன்னா பெலோ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: