சேறும் சகதியுமாக காட்சியளிக்கும் சாலையால் நோயாளிகள் அவதி

நெட்டப்பாக்கம், டிச. 18: நெட்டப்பாக்கம் அடுத்த கரையாம்புத்தூர் பகுதியில் மருத்துவமனைக்கு ெசல்லும் சாலை சேறும் சகதியுமாக உள்ளதால் நோயாளிகள், பொதுமக்கள் கடும் அவதி அடைகின்றனர்.கரையாம்புத்தூர் பகுதியில் சுமார் 2 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் நலனுக்காக இப்பகுதியில் அரசு சார்பில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. கரையாம்புத்தூர் மட்டுமின்றி அருகில் உள்ள பனையடிக்குப்பம், வையாபுரி நகர், சின்ன கரையாம்புத்தூர், மணமேடு, கடுவனூர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்களும் இந்த ஆரம்ப சுகாதார நிலையத்ைத பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் கரையாம்புத்தூர் பஸ் நிறுத்தத்தில் இருந்து ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக மிக மோசமான நிலையில் உள்ளது. இந்த சாலை அமைக்கப்பட்டு நீண்ட காலம் ஆவதால் ஜல்லி கற்கள் பெயர்ந்து வெறும் மண் தரையாக காணப்படுகிறது. இதில் மழைக்காலத்தில் அதிகளவில் தண்ணீர் தேங்கி நிற்கிறது. அவ்வாறு தேங்கும் மழைநீர் பல நாட்கள் ஆனாலும் வடிவதில்லை.

தற்போது கூட இந்த சாலை சேறும், சகதியுமாக காணப்படுகிறது. இதனால் மருத்துவமனைக்கு வருபவர்கள் கடும் சிரமம் அடைந்து வருகின்றனர். அவசரத்திற்கு ஆம்புலன்ஸ் ெசல்வதற்கு கூட சிரமம் ஏற்படுகிறது. மேலும் இப்பகுதியில் நூலகம், கோயில், குடியிருப்பு உள்ளிட்டவை அமைந்துள்ளன. இதனால் பலதரப்பட்ட மக்களும் வந்து செல்கிறார்கள். அவர்களும் இந்த சேறும், சகதியுமான சாலையால் அவதி அடைகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இந்த சாலையை சீரமைக்க உடனடி நடவடிக்கையில் இறங்க வேண்டும் என பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: