ஏனாம் சிறையில் கைதி தப்பி ஓட்டம்

புதுச்சேரி,  டிச. 18:  ஏனாம் சிறையில் விசாரணை கைதி தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக விசாரணை நடத்தி வரும் சிறை நிர்வாகம்,  பணியிலிருந்த ஊழியரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டுள்ளது. புதுவை  மாநிலத்தில் புதுச்சேரி, காரைக்கால், மாகே, ஏனாம் பிராந்தியங்கள் உள்ளது.  அந்தந்த பிராந்தியங்களில் குற்றசம்பவங்களில் ஈடுபடுவோரை போலீசார் கைது  செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தி, அந்தந்த பகுதியில் உள்ள சிறையில் அடைத்து வருகின்றனர். இந்நிலையில் ஏனாம் சிறைச்சாலையில் விசாரணை கைதியாக இருந்த தரியலதப்பா பகுதியை  சேர்ந்த  ஜெக்கா ஸ்ரீனு (28) என்பவர் அங்கிருந்து நேற்று காலை தப்பி ஓடிவிட்டார். ரவுடியான  இவர் மீது கொலை வழக்கு நிலுவையில் உள்ளது. மேலும் திருட்டு வழக்கில்  சிறையில் இருந்து நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவானதால்  நீதிமன்றம் பிறப்பித்த பிடிவாரண்ட் பேரில், அவரை ஏனாம் இன்ஸ்பெக்டர் சத்யநாராயணன்  தலைமையிலான போலீசார் கைது செய்து சிறையில் அடைத்திருந்தனர்.

இந்த நிலையில் தன்னுடன் தங்கியிருந்த ரவுடி தத்தா பிரசாத் டிபன் சாப்பிட  வெளியே சென்றிருந்தபோது அவர் சுவர்ஏறி குதித்து தப்பி ஓடியது  தெரியவந்துள்ளது. இதுபற்றி சிறை பொறுப்பாளர் மாணிக்கம் என்பவர் ஏனாம் காவல்  நிலையத்தில் முறையிட்டுள்ளார். அதன்பேரில் ஏனாம் எஸ்பி மர்ட்டி ரமேஷ்  தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே கைதி தப்பி ஓடிய  சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டுள்ள சிறை நிர்வாகம் சம்பவத்தின்போது  அங்கு பணியிலிருந்த ஊழியர் ஒருவரை அதிரடியாக சஸ்பெண்ட் செய்து  உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related Stories: