அனைத்துக்கட்சியினருக்கு முதல்வர் திடீர் அழைப்பு

புதுச்சேரி,  டிச. 18:  நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு முதல்வர் நாராயணசாமி திடீர் அழைப்பு விடுத்திருப்பது புதுவை அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நியமன எம்எல்ஏக்கள் விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க நாளை (19ம்தேதி) அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு  முதல்வர் நாராயணசாமி திடீரென அழைப்பு விடுத்துள்ளார். இக்கூட்டத்தில் அரசியல் ரீதியாக  மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கட்சிகளின் கருத்துகளை கேட்கிறார்.  புதுவையில் பாஜகவை சேர்ந்த சாமிநாதன், சங்கர், செல்வகணபதி ஆகியோரை  மத்திய அரசு கடந்தாண்டு ஜூலை மாதம்  நியமன எம்எல்ஏக்களாக நியமித்தது. ஆனால் மாநில அரசின்  பரிந்துரையின்றி நியமிக்கப்பட்ட 3 பேருக்கும் சபாநாயகர் வைத்திலிங்கம்  பதவி பிரமாணம் செய்ய மறுத்துவிட்டார். இதையடுத்து ராஜ்நிவாசில் கவர்னர்  கிரண்பேடி 3 பேருக்கும் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

இருப்பினும்  அவர்களை சபாநாயகர் வைத்திலிங்கம் அங்கீகரிக்கவில்லை. இதனால்  சென்னை உயர்நீதிமன்றம் வரை சென்று பின்னர், உச்சநீதிமன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், மத்திய  அரசின் நியமனம் செல்லும், 3 எம்எல்ஏக்களும் சட்டசபை ஓட்டெடுப்புகளில்  பங்கேற்கலாம் என உத்தரவிட்டது. இதையடுத்து கடந்த 14ம் தேதி கூடிய சட்டசபை  சிறப்பு கூட்டத்தில் 3 நியமன எம்எல்ஏக்களும் கலந்து கொண்டனர். இந்நிலையில் முதல்வர் நாராயணசாமி திடீரென அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இதுதொடர்பாக எம்எல்ஏக்களுக்கு அழைப்பு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் 3 எம்எல்ஏக்களை மத்திய அரசு நியமித்த வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு புதுச்சேரி மக்களாட்சிக்கு எதிர்ப்பாகவும், மாநில மக்களின் அடிப்படை உரிமைகளை பறிப்பதாகவும் இருக்கிறது.

எனவே இந்த பிரச்னை தொடர்பாக விவாதித்து அரசியல் ரீதியாக மேற்கொள்ள  வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காக 100 அடி சாலையில் உள்ள  தனியார் ஓட்டலில் 19ம் தேதி (நாளை) அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறவுள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு தங்களின் மேலான கருத்துக்களை கூறுமாறு கேட்டுக் கொள்வதாக கடிதத்தில் தெரிவித்துள்ளார்.  சட்டசபை முடிந்த பிறகு திடீரென அனைத்துக்கட்சி கூட்டத்துக்கு முதல்வர் நாராயணசாமி அழைப்பு விடுத்திருப்பது  புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: