அடிப்படை வசதிகள் கேட்டு திருச்சி தனியார் பள்ளி மாணவர்கள் தேர்வை புறக்கணித்து போராட்டம் போலீசார் பேச்சுவார்த்தை

திருச்சி, டிச.18: திருச்சி டோல்கேட் பகுதியில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் அடிப்படை வசதிகள் இல்லாததை கண்டித்து நேற்று அரையாண்டு  தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.திருச்சி டிவிஎஸ் டோல்கேட்டில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 1ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை ஆயிரக்கணக்கான மாணவர்கள் படிக்கின்றனர். பள்ளியில் அடிப்படை வசதிகள் இன்றி மாணவர்கள் அவதிப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

இதை கண்டித்தும், மாணவர்களை உதவி  தலைமையாசிரியர் ஆபாசமாக பேசியதாக கூறியும், ஆசிரியர்கள் போல் நடந்துகொள்ளும் சத்துணவு ஊழியரை கண்டித்தும் இந்திய மாணவர் சங்கம் சார்பில் பள்ளி முன் நேற்று காலை போராட்டம் நடந்தது. தற்போது அரையாண்டு தேர்வு நடைபெற்று வரும் நிலையில் நேற்று நூற்றுக்கணக்கான மாணவர்கள் தேர்வை புறக்கணித்து போராட்டத்தில் கலந்துகொண்டனர். மாணவர்களின் பெற்றோரும் பங்கேற்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

தகவலறிந்த கே.கே.நகர் போலீசார், பள்ளி நிர்வாகிகள் அங்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மாவட்ட கல்வி அலுவலர் வர வேண்டும் என கூறி போராட்டத்தை தொடர்ந்தனர். பின்னர் பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதியளித்ததால் ஒரு மணி நேரம் தாமதமாக வகுப்பறைக்கு சென்று மாணவர்கள் தேர்வெழுதினர்.

Related Stories: